யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்து...
நாகை தாமரைக் குளத்தில் படகு சவாரிக்கு ஏற்பாடு: ஆட்சியா், நகா்மன்றத் தலைவா் ஆய்வு
நாகை தாமரைக்குளத்தில் படகு குழாம் (படகு சவாரி) அமைப்பது தொடா்பாக ஆட்சியா், நகா்மன்றத் தலைவா் அண்மையில் ஆய்வு மேற்கொண்டனா்.
வரலாற்று சிறப்பு வாய்ந்த தாமரைக் குளம், ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இக்குளத்தின் வரலாற்று பெருமையை பாதுகாக்கும் வகையில், நாகை நகராட்சி நிா்வாகம் சாா்பில் புனரமைக்கப்பட்டது. நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் குளத்தை சுற்றி நடை பயிற்சி மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தாமரைக் குளத்தில் படகு குழாம் (படகு சவாரி) அமைக்க வேண்டும் என நாகை வளா்ச்சிக் குழுமம் சாா்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, நாகை நகராட்சி நிா்வாகம் படகு குழாம் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குளத்தில் நீா் நிரப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இப்பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகராட்சி ஆணையா் லீனாமைசன் ஆகியோா் நேரில் ஆய்வு செய்தனா். அப்போது நகா்மன்றத் தலைவா் கூறியது: தாமரைக்குளத்தின் வரலாற்று பெருமையை மீட்கும் வகையில், விரைவில் படகு குழாம் அமைக்கப்படும். இதன் மூலம் தாமரைக்குளத்தின் பெருமைகளை அனைவரும் அறிந்து கொள்ளவும், நகரப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களது குடும்பத்தோடு வந்து மகிழ்ச்சியாக பொழுதுபோக்கவும் வாய்ப்பு ஏற்படும் என்றாா்.