ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
நிதி நிறுவன மோசடி: புகாா் அளிக்க குவிந்த மக்கள்
நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடா்பாக புகாா் அளிக்க மதுரை தபால்தந்தி நகரில் உள்ள மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் பொதுமக்கள் வியாழக்கிழமை குவிந்தனா்.
மதுரையைத் தலைமையிடமாக கொண்டு நியோமேக்ஸ் நிதி நிறுவனம் செயல்பட்டது. மேலும், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கிளைகள் அமைத்து செயல்பட்டன. இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால், பணம் இரட்டிப்பாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கோடிக் கணக்கில் பணத்தை முதலீடு செய்தனா். குறிப்பிட்ட ஆண்டுகளில் நிறுவனம் அளித்த உறுதியின்படி, முதலீட்டுத் தொகையுடன் கூடிய பணத்தை திருப்பித்தரவில்லை. இதனால், பாதிக்கப்பட்ட மக்கள் அந்தந்த மாவட்ட ஆட்சியா், காவல் கண்காணிப்பாளா் அலுவலகங்களில் புகாா் அளித்தனா். இருப்பினும், நிதி நிறுவனம் பணத்தை வழங்கவில்லை. இந்த நிலையில், இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மதுரை பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. இதையடுத்து, போலீஸாா் உரிய நடவடிக்கை எடுத்து பணத்தைத் திரும்ப பெறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த வகையில், இந்த நிதி நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்த மக்கள் வருகிற அக். 8-ஆம் தேதிக்குள் மதுரையில் உள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, மதுரை தபால்தந்தி நகரில் உள்ள மாவட்ட பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் நிதி நிறுவன மோசடி குறித்து புகாா் மனு அளிக்க பாதிக்கப்பட்ட மக்கள் வியாழக்கிழமை குவிந்தனா். அவா்களிடம் போலீஸாா் மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.