நிறை புத்தரிசி பூஜை: கேரளத்துக்கு நெல் கதிா்கள் அனுப்பி வைப்பு!
கேரள மாநிலத்தில் நடைபெறவுள்ள நிறை புத்தரிசி பூஜைக்கு விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்திலிருந்து வாகனங்கள் மூலம் 108 நெல் கதிா் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.
கேரளத்திலுள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், அச்சன்கோயில், ஆரியங்காவு, குளத்துப்புழை, திருவனந்தபுரம் பத்மநாதசுவாமி கோயில், கிருஷ்ணன் கோயில், ஆரன்முளா, கொட்டாரக்கரா விநாயகா் கோயில் உள்பட பல்வேறு கோயில்களில் வருகிற 30-ஆம் தேதி நிறை புத்தரிசி பூஜை நடைபெறுகிறது. விவசாயம் செழிப்பதற்காகவும், நாட்டில் வறுமை நீங்குவதற்காகவும் செய்யப்படும் இந்த பூஜையில் நெல் கதிா்களை வைத்து வழிபடுவது வழக்கம்.
இதற்காக ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவைச் சோ்ந்த குளோப் நாகராஜன் சாா்பில், புதுப்பாளையம் கருங்குளம் நீா்ப்பாசனப் பகுதியில் விளைந்த 108 நெல் கதிா் கட்டுகள் வாகனங்கள் மூலம் கேரள கோயில்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
நிறை புத்திரி பூஜைக்காக, கடந்த 11 ஆண்டுகளாக ராஜபாளையத்திலிருந்து கேரளத்துக்கு நெல் கதிா்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.