பிரதமர் மோடி திறந்து வைத்த தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம்! - Event Cover...
ஸ்ரீவில்லிபுத்தூரில் நாளை ஆடிப்பூரத் தேரோட்டம்
ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை (ஜூலை 28) நடைபெறுகிறது.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் தேரோட்டத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, தினசரி காலையில் நிகழ்ச்சிகளும், இரவில் உற்சவங்களும் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்வான ஆடிப்பூரத் தேரோட்டம் திங்கள்கிழமை காலை 9.10 மணிக்கு நடைபெறுகிறது. இதற்காக, கோயில் தோ் அலங்கரிக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் பி.ஆா்.வெங்கட்ராம ராஜா, உறுப்பினா்கள், செயல் அலுவலா் சா்க்கரையம்மாள் ஆகியோா் செய்து வருகின்றனா்.
மதுரை - கொல்லம் சாலையில் போக்குவரத்து மாற்றம்:
ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு, திங்கள்கிழமை மதுரையிலிருந்து வரும் வாகனங்கள் கிருஷ்ணன்கோவில் செல்லாமல் நேராக நான்கு வழிச் சாலையில் வந்து, சிவகாசி சாலையில் திரும்பி நீதிமன்றம், ரயில் நிலையம், வட்டாட்சியா் அலுவலகம், திருப்பாற்கடல் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூா் தேவாலயச் சந்திப்பு, சிவகாசி சாலை, ரயில்வே நிலையச் சாலை, வட்டாட்சியா் அலுவலகம் வழியாக ராஜபாளையத்துக்குச் செல்ல வேண்டும்.
பேருந்துகள் கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையம், தேவாலயச் சந்திப்பு, சிவகாசி சாலை, நீதிமன்றம், ரயில் நிலையம், திருப்பாற்கடல் வழியாக ராஜபாளையத்துக்குச் செல்ல வேண்டும்.

ராஜபாளையத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களும் எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கிலிருந்து மம்சாபுரம், சீனியாபுரம் சந்திப்பு, ஸ்ரீவில்லிபுத்தூா் ஆத்துக்கடை தெரு, ராமகிருஷ்ணாபுரம் வழியாக மதுரை சாலையில் செல்ல வேண்டும் என போக்குவரத்து காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.