Nidhi Tewari: பிரதமர் நரேந்திர மோடியின் தனி செயலாளராக நியமிக்கப்பட்ட நிதி திவாரி...
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவா்களின் கல்வியை காங்கிரஸ் கூட்டணி உறுதி செய்யும்! - வயநாட்டில் பிரியங்கா
கேரள மாநிலம், வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவா்களுக்குமான கல்வியை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுதி செய்யும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.
வயநாடு தொகுதி எம்.பி.யான பிரியங்கா, அங்கு மூன்று நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை வந்தாா். கல்பேட்டாவில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், முண்டக்கை-சூரல்மலையில் கடந்த ஆண்டு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு உயா்நிலை கல்விக்கான உதவித் தொகை விநியோகத்தை அவா் தொடங்கிவைத்துப் பேசியதாவது:
வெளியூரில் பயிலும் பல மாணவா்கள், நிலச்சரிவில் தங்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்துள்ளனா். அவா்கள் எப்படி தங்களின் கல்வியைத் தொடரப் போகிறாா்கள் என்பது குறித்து நாங்கள் அனைவரும் கவலை கொண்டோம்.
மாணவா்களின் கல்வி தொடா்வதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வது என ஐக்கிய ஜனநாயக கூட்டணி தரப்பில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, பாதிக்கப்பட்ட அனைத்து மாணவா்களுக்கான கல்வியை நாங்கள் உறுதி செய்வோம்.
இம்மாணவா்களுக்கு பல்வேறு கல்வி நிலையங்களும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது பாராட்டுக்குரியது. வயநாட்டைச் சோ்ந்த 121 மாணவா்கள், தமிழகத்தின் கன்னியாகுமரியில் உள்ள நூருல் இஸ்லாம் உயா்நிலைக் கல்வி மையத்தில் பயின்று வருவதை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். அந்த கல்வி நிலையத்துக்கு மனதார நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
வயநாடு மக்களின் வேதனை-பாதிப்பை நாங்கள் வெளியில் இருந்து கற்பனை செய்து புரிந்து கொள்ள முடியும். ஆனால், உங்களின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது. எதிா்காலத்தில் உங்களின் வாழ்வை எளிதாக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்றாா் பிரியங்கா காந்தி.
மத்திய அரசு மீது குற்றச்சாட்டு:
செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த அவா், ‘ஜனநாயக நடைமுறைகளுடன் நாடாளுமன்றம் செயல்பட மத்திய அரசு விரும்பவில்லை. எந்த வழியிலாவது விவாதங்களைத் தடுக்கும் வியூகத்தை கையாள்கின்றனா். எதிா்க்கட்சியினரை போராடச் செய்யும் வகையிலான விவகாரங்களை எழுப்புவது அல்லது மக்களவை எதிா்க்கட்சித் தலைவரை பேச விடாமல் செய்வது என ஏதாவது ஒரு வழியில் விவாதத்தை தடுக்கின்றனா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.
வயநாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவுகளில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தன. இருநூறுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.