மாநகராட்சி கூட்டத்தில் மோதல்: அதிமுக கவுன்சிலரை கன்னத்தில் அறைந்த திமுக பெண் கவு...
நிலச்சரிவு அபாயம்! உதகை - கூடலூர் சாலையில் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு!
உதகை - கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளார் நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக பலத்த காற்றுடன் கனமழைப் பெய்து வருகிறது. பல இடங்களில் சாலையின் குறுக்கே மரங்கள் விழுந்து வருகின்றன.
எனவே, சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு லேம்ஸ்ராக், டால்பின் நோஸ், கேத்தரின் அருவி, தொட்டபெட்டா காட்சிமுனை, எட்டாவது மலை பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம், பைக்காரா அருவி, கேரன்ஹில் சுற்றுலாத்தலம், அவலாஞ்சி உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் இன்று(மே 28) மூடப்பட்டுள்ளன.
நேற்று(மே 27) உதகையிலிருந்து மைசூரு, முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய கல்லட்டி மலைப் பாதையில் 20-ஆவது கொண்டை ஊசி வளைவு பகுதியில் ராட்சத பாறை சாலையில் உருண்டோடி பள்ளத்தில் விழுந்தது. பாறையுடன் மரங்களும் விழுந்ததால் சாலையில் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், நடுவட்டம் - கூடலூர் சாலையில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதால் இச்சாலையில் அபாயகரமான பாறைகள் அகற்றும் வரை கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பேருந்துகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை செல்லலாம் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: தமிழ்தான் அகில உலகின் மூத்த மொழி: அன்புமணி