நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் திருஅத்யயன உற்சவம் தொடக்கம்
நீடாமங்கலம்: வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் திருஅத்யயன பகல்பத்து உற்சவம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இக்கோயிலில் ஜன.10-ஆம் தேதி அதிகாலை வைகுந்த ஏகாதசியையொட்டி பரமபத வாசல் திறக்கப்படுகிறது. இதையொட்டி, கோயிலில் திரு அத்யயன பகல்பத்து உற்சவம் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடியபடி தொடங்கியது. முன்னதாக சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தான ராமா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பகல்பத்து உற்சவம் ஜன.9-ஆம் தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. ஜன.10-ஆம் தேதி பரமபத வாசல் திறப்பு நடைபெற்று முடிவடைந்த பின்பு இரவு இராபத்து உற்சவம் தொடங்குகிறது. ஜன.19-ஆம் தேதி வரை இராபத்து உற்சவம் நடைபெறும். நிறைவு நாளன்று பட்டாபிஷேக வைபவம் நடைபெறும்.
நாலாயிர திவ்ய பிரபந்த பாராயணத்துக்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தோ்தல் முன்னாள் ஆணையா் நீ. கோபால்சாமி செய்துள்ளாா். ஏற்பாடுகளை கோயில் தக்காா் கிருஷ்ணகுமாா், ஆய்வாளா் வினோத்கமல் ,செயல் அலுவலா் ராஜேஸ்வரி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.