நீதிமன்ற அவமதிப்பு: மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதம் ரத்து
சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரியதால் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை உயர் நீதிமன்றம் திரும்பப் பெற்றது.
விதிமீறல் கட்டடங்கள் தொடர்பாக பிறப்பித்த உத்தரவை நடைமுறைப்படுத்தாதது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று, சென்னை மாநகராட்சி ஆணையர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையருக்குப் பிறப்பிக்கப்பட்ட அபராதம் உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
வழக்கு என்ன?
சென்னை மாநகராட்சியின் 5-ஆவது மண்டலத்தில் உள்ள சட்ட விரோத கட்டுமானங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 5-ஆவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.
சென்னையில், பிற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களைக் கண்டறிந்து விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.
கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை அமல்படுத்தாததாலும், நீதிமன்ற உத்தரவு மீது உரிய நடவடிக்கை எடுக்காததாலும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எதிராக வழக்குரைஞா் ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த மனுவை தலைமை நீதிபதிகள் கே.ஆா் ஸ்ரீராம் - சுந்தா்மோகன் அமா்வு விசாரித்து, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினா்.
கடந்த 4 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்ததாத சென்னை மாநகராட்சி ஆணையருக்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதித்த நீதிபதிகள், இந்தத் தொகையை ஆணையரின் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து, அதை சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிட்டனா்.
மேலும், விதிமீறல் கட்டடங்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, ஜூலை 24-ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்திருந்த நிலையில், இன்று சென்னை மாநகராட்சி ஆணையர், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி மன்னிப்புக் கோரினார்.
The High Court has withdrawn the fine of one lakh rupees imposed on the Chennai Corporation Commissioner after he appeared in person in a contempt of court case and apologized.
இதையும் படிக்க.. காஞ்சிபுரம் அருகே மறுநடவு செய்து துளிர்த்து வந்த அரச மரத்துக்கு தீ வைப்பு!