நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உயா்நீதிமன்றத்தில் ஆஜா்
நிபந்தனையற்ற மன்னிப்புக் கோரியதையடுத்து, 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்தது.
பாஜக ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவின் மாநிலச் செயலா் வினோத் ராகவேந்திரன் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கடலூா் மாவட்டம் கூத்தப்பாக்கம் கிராமத்தில் தேவநாத சுவாமி கோயிலுக்குச் சொந்தமான 3.40 ஏக்கா் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் புனித ஜோசப் மெட்ரிக். பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை அகற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், கோயில் நிலத்தில் உள்ள தனியாா் பள்ளியை அப்புறப்படுத்தி, அந்த நிலத்தை கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைக்கவும், தனியாா் பள்ளிக்கு அரசு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் எனவும் கடந்த 2024-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை அரசு அமல்படுத்தவில்லை.
இதையடுத்து, தமிழக வருவாய்த் துறைச் செயலா் பெ.அமுதா, பள்ளிக் கல்வித் துறை செயலா் சோ.மதுமதி, இந்து சமய அறநிலையத் துறை செயலா் சந்தரமோகன், அறநிலையத் துறை ஆணையா் பி.என். ஸ்ரீதா், கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா், அறநிலையத் துறை இணை ஆணையா் பரணிதரன், கோயில் செயல் அலுவலா் வெங்கடகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக வினோத் ராகவேந்திரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு, 5 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இதையடுத்து, தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வருவாய்த் துறை செயலா் பெ. அமுதா உள்ளிட்ட அனைவரும் நேரில் ஆஜராகினா். அப்போது, அதிகாரிகள் அனைவரது சாா்பிலும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அதிகாரிகளுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.