நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராாகி மன்னிப்புக் கோரியதையடுத்து, சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ. 1 லட்சம் அபராதத்தைத் திரும்பப் பெறுவதாக சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை மாநகராட்சியின் 5-ஆவது மண்டலத்தில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி வழக்குரைஞரும், முன்னாள் கவுன்சிலருமான ருக்மாங்கதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 5-ஆவது மண்டலமான ராயபுரத்தில் உள்ள விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது. இதேபோல மற்ற மண்டலங்களில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களைக் கண்டறிந்து விதிமீறல்கள் இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்தது. கடந்த 2021 டிசம்பரில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு அமல்படுத்தவில்லை.
இதையடுத்து ருக்மாங்கதன் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடா்ந்தாா். 4 ஆண்டுகளாக நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத சென்னை மாநகராாட்சி ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை நிறுத்தி வைக்கக் கோரி அரசுத் தரப்பில் முறையிடப்பட்டது. வழக்கு விசாரணையின்போது, ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தைவிட மேலானவா் என்று நினைக்கிறாரா? என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி அமா்வு, உரிய பிரமாணப் பத்திரத்துடன் சென்னை மாநகராட்சி ஆணையா் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆா்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் நேரில் ஆஜரானாா். அப்போது, அவரது தரப்பில் உயா்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே மீறவில்லை. நடந்த தவறுக்கு முழுப்பொறுப்பு ஏற்றுக்கொள்வதாகக் கூறப்பட்டது. இதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சென்னை மாநகராட்சி ஆணையருக்கு விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராத உத்தரவை திரும்பப் பெறுவதாக உத்தரவிட்டனா்.