கடவுள் ராமா் குறித்து சா்ச்சை கருத்து: ராகுலுக்கு எதிராக உ.பி. நீதிமன்றத்தில் மன...
நெய்வேலி என்எல்சி அனல் மின் நிலையத்தில் தீ விபத்து
கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின் கசிவால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது.
என்எல்சியில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 3.30 மணியளவில் அம்மேரி அருகில் உள்ள இரண்டாம் அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் உள்ள மின்மாற்றியில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
தீ விபத்தால் மின்மாற்றி வெடித்ததில் அந்தப் பகுதியில் பெரும் புகை சூழ்ந்தது. மேலும், அருகில் இருந்த வயா் உள்ளிட்ட பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
தகவலறிந்த என்எல்சி தீயணைப்பு நிலையத்தினா் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாகப் போராடி தீயை அணைத்தனா்.
மின்மாற்றி அருகே யாரும் இல்லாததால் எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை. விபத்து குறித்து என்எல்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த தீ விபத்தால் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
