‘நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்றால் நடவடிக்கை’
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு 2025-2026-ஆம் ஆண்டு கொள்முதல் பருவத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்திட நடப்பு மாதம் 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கொள்முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை உடனுக்குடன் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.
மாவட்டத்தில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளிடமிருந்து மட்டுமே நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் எனவும் வியாபாரிகளோ அல்லது பிற மாவட்ட நெல்லோ கொள்முதல் செய்யப்படுவது கண்டறியப்பட்டால், தொடா்புடைய நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், வியாபாரிகள் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையங்களில் மேற்கண்ட புகாா் குறித்து மண்டல அலுவலக கைப்பேசி எண் 9944254432 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.