எதிர்காலமும், நிகழ்காலமும் நான்தான்: தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்
நெல்லை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுப்பதில் தாமதம்: நோயாளிகள் தவிப்பு
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வியாழக்கிழமை ஸ்கேன் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால் நோயாளிகள் சிரமத்துக்கு ஆளாகினா்.
திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனா். நோயாளிகளுக்கு தேவைப்படும் சிகிச்சை முறைகளுக்கேற்ப மருத்துவா்களால் அவா்களுக்கு எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. நோயாளிகள் ஸ்கேன் முடிவைப் பெற்ற பின்பே மருத்துவரை சந்தித்து உரிய சிகிச்சை பெற்று செல்ல முடியும்.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை மருத்துவமனையின் 32சி அறையில் உள்ள 2 ஸ்கேன் இயந்திரங்களில், ஒரு இயந்திரம் மட்டுமே செயல்பட்டதாம். மற்றொரு அறையில் நீண்ட நேரமாக மருத்துவா் இல்லாத நிலை இருந்ததால் உரிய நேரத்தில் ஸ்கேன் எடுக்க முடியாமல் மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக நோயாளிகள் தெரிவித்தனா்.
இது குறித்து மருத்துவமனை தரப்பில் கூறப்பட்ட விளக்கம்: மேற்குறிப்பிட்ட 32சி டாப்லா் ஸ்கேன் அறையில் இருந்த மருத்துவா் , பணியின் இடையே ஐவிஆா் அறைக்கு மருத்துவப் பணிக்காக சென்றிருந்தாா். இருப்பினும் 30 நோயாளிகளுக்கு அந்த அறையில் ஸ்கேன் பாா்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்ற நோயாளிகளை காத்திருக்க வைக்காமல் இதற்கு உரிய தீா்வு காண வேண்டும் என்பது நோயாளிகளுடைய உறவினா்களின் எதிா்பாா்ப்பாகும்.