நெல்லை: பென்சில் தகராறில் 8-ம் வகுப்பு மாணவருக்கு அரிவாள் வெட்டு; சக மாணவர் வெறிச்செயல்!
நெல்லை மாவட்டத்தில் சமீப காலமாக மாணவர்கள் மத்தியில் அரிவாள் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இதனை ஒழிக்க மாணவர்கள் மத்தியில் கல்வித்துறையினர் , காவல்துறையினர் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அவை குறைந்தபாடில்லை. ’தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு’ என அழைக்கப்படும் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் பல தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன. பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அருகில் தனியார் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தற்போது முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று காலையில் வழக்கம்போல் அப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வந்தனர். 8-ம் வகுப்பு பிரிவு ஒன்றில் பயிலும் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கும் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மாணவர், தனது புத்தகப்பையில் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அந்த மாணவரை வெட்டியுள்ளார்.
இதில் மூன்று இடங்களில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இச்சம்பவத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சமூக அறிவியல் பாட ஆசிரியை ரேவதிக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. உடனே சக மாணவர்கள் அலறல் சத்தம் போட்டனர். அரிவாளுடன் தன் சட்டையில் ரத்தம் சொட்டச் சொட்ட பள்ளியில் இருந்து வேகமாக ஓடிய அந்த மாணவர், பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

பதறிய போலீஸார் மாணவரிடம் நடத்திய விசாரணையில் அரிவாள் வெட்டு சம்பவத்தைக் கூறியுள்ளார். இதற்கிடையில் காயமடைந்த மாணவர் மற்றும் ஆசிரியை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நெல்லை மாநகர காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமணி தலைமையிலான போலீஸார், அரிவாளால் வெட்டும் அளவிற்கு அவர்களுக்கு இடையே என்ன மோதலுக்கான காரணம் என்ன? என விசாரணை நடத்தினர்.
இது குறித்து நெல்லை மாநகர காவல் உதவி ஆணையர் சுரேஷ் கூறுகையில், “இரண்டு மாணவர்களும் நெருங்கிய நண்பர்களாக நட்பாகத்தான் இருந்து வந்துள்ளனர். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பென்சில் வாங்கியது தொடர்பாக வகுப்பறையிலேயே வாக்குவாதம் வந்துள்ளது. இதை அறிந்த ஆசிரியை இருவரையும் கண்டித்ததுடன், இருவரின் பெற்றோருக்கும் தகவலைச் சொல்லி அவர்களை அழைத்து அவர்கள் மத்தியிலும் மாணவர்கள் இருவரையும் எச்சரித்துள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு அந்த மாணவர் புத்தகப்பையில் அரிவாளை மறைத்து எடுத்து வந்து வகுப்பு நடந்து கொண்டிருந்தபோது வெட்டியுள்ளார். தடுக்க முயன்ற ஆசிரியைக்கும் வெட்டு விழுந்துள்ளது. ஆனாலும், இருவருக்கும் லேசான காயம்தான் ஏற்பட்டுள்ளது. இருவரும் நலமுடன் உள்ளனர். தொடர்ந்து மாணவரிடம் விசாரித்து வருகிறோம்” என்றார்.

”அரசுப் பள்ளிகளில் தொடர்வதைப்போல, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புத்தகப்பைகளை பள்ளி நிர்வாகம் சோதனையிட வேண்டும்” என நெல்லை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் , பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள், ”எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை” எனக்கூறி பள்ளியை முற்றுகையிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பிற்காக 20-க்கும் மேற்பட்ட போலீஸார் பள்ளி வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.