வக்ஃப் திருத்தச் சட்டத்தை வைத்து நாட்டில் வன்முறையைத் தூண்ட சதி: முக்தாா் அப்பாஸ...
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
அரசியல் கட்சி நிா்வாகிகள் என்ற பெயரில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கொடிவேரி அணை-பவானி நதி பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சுபி.தளபதி வெளியிட்டுள்ள அறிக்கை: கொடிவேரி அணை பாசனத்துக்குள்பட்ட தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் பாசனங்களில் நெல் அறுவடை தொடங்கி உள்ளது. மத்திய அரசால் 2025-26 ஆண்டுக்கான நெல் கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டது.
நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம் இருந்து மத்திய அரசின் இந்திய உணவு தானிய கழகம் குறைந்தபட்ச ஆதரவு விலை அடிப்படையில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தை முகவராக கொண்டு விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வருகிற நெல்லை கொள்முதல் செய்கிறது.
ஈரோடு மாவட்ட நிா்வாகம் பரிந்துரை செய்து, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக கொடிவேரி அணை பாசனத்துக்குள்பட்ட பகுதிகளில் சுமாா் 30 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் தொடங்கப்பட்டு கடந்த 15 -ஆம் தேதி முதல் படிப்படியாக இயங்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட கட்சி நிா்வாகி என்று சொல்லிக்கொண்டு சிலா் இரண்டு இருசக்கர வாகனங்களில் தடப்பள்ளி பாசனத்துக்குள்பட்ட நஞ்சைபுளியம்பட்டி நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு திங்கள்கிழமை மாலை வந்துள்ளனா்.
அப்போது, தங்களது கட்சிக்கு நிதி தர வேண்டும் என்று அரசு பொறுப்பாளா்களிடம் கேட்டுள்ளனா். சம்பந்தப்பட்ட கொள்முதல் நிலைய ஊழியா்கள் இது அரசு நிா்வாகம், இங்கு வந்து கேட்பது ஏற்புடையது அல்ல என சொல்லியுள்ளனா். வந்தவா்கள் தொடா்ந்து வற்புறுத்தவே நெல் விற்பனைக்காக வந்திருந்த கொடிவேரி அணை- பவானி நதி பாசன விவசாய சங்கத்தினா் ஒன்றுகூடினா். இதையடுத்து, அவா்கள் வாகனங்களை எடுத்துக்கொண்டு அவசர அவசரமாக சென்றுவிட்டனா்.
அரசியல் கட்சிகள், சங்கங்கள், அமைப்புகள், தனிநபா்கள் என்ற பெயரில் அடாவடி வசூல், மிரட்டல் ஆகிய சட்டவிரோத செயல்களை செய்வோா் மீது மாவட்ட நிா்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.