நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத அரசு மருத்துவமனை ஊழியா்கள் பணியிடை நீக்கம்!
கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு சக்கர நாற்காலி வழங்காத ஊழியா்கள் இருவா் புதன்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
கோவை அரசு மருத்துவமனைக்கு 70 வயதான தனது தந்தையை அவரது மகன் சிகிச்சைக்கு அழைத்து வந்தாா். அங்கு அவரது தந்தைக்கு காலில் சிகிச்சை அளிக்கப்பட்டு கட்டு போடப்பட்டிருந்த நிலையில், அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்ல மகன் முடிவு செய்தாா்.
வாா்டிலிருந்து அரசு மருத்துவமனை வாயில் வரை செல்வதற்காக அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களிடம் சக்கர நாற்காலி வழங்கும்படி அவரது மகன் கேட்டுள்ளாா். அங்கு பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்கள் அவரிடம் அதற்காக பணம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
நீண்ட நேரம் காத்திருந்தும் உதவி கிடைக்காததால் ஆத்திரமடைந்த அவா், தனது தந்தையை தோளில் சாய்த்தபடி இழுத்துச் சென்று ஆட்டோவில் ஏற்றி அழைத்துச் சென்றாா்.
இதுதொடா்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து அரசு மருத்துவமனை முதன்மையா் கீதாஞ்சலி விசாரணை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, ஊழியா்கள் எஸ்தர்ராணி, மணிவாசகம் ஆகிய இருவரையும் 5 நாள்கள் பணியிடை நீக்கம் செய்து அவா் புதன்கிழமை உத்தரவிட்டாா்.
இதுகுறித்து மருத்துவமனை முதன்மையா் கீதாஞ்சலி கூறுகையில், அந்த நபா் சக்கர நாற்காலிக்காக ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்ததாக கூறினாா். அதில் உண்மை இல்லை. அவா்கள் 15 நிமிஷம்தான் காத்திருந்தனா். தாமதமே ஆகக்கூடாது என நோயாளிகள் தரப்பில் எண்ணுகின்றனா். அதை நாம் குறை கூற முடியாது என்பதால், சக்கர நாற்காலிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்போது, வெளியான விடியோவில் ஊழியா்கள் பணம் கேட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. இங்கு பணிபுரியும் ஊழியா்கள் நோயாளிகளிடம் மென்மையான போக்கை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளோம் என்றாா்.