நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் கல்லீரல் மாற்று சிகிச்சை
கல்லீரல் செயலிழப்புக்கு உள்ளான நோயாளிக்கு லேப்ரோஸ்கோபி முறையில் நுண் துளை வாயிலாக உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொண்டு சென்னை கிளெனீகில்ஸ் மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
இது தொடா்பாக மருத்துவமனையின் கல்லீரல் மாற்று சிகிச்சை மற்றும் மருத்துவத் துறை நிபுணா்கள் விவேக் விஜ், ஜாய் வா்கீஸ் ஆகியோா் கூறியதாவது:
கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த 53 வயது நோயாளி ஒருவா் கடந்த மாதம் கடுமையான வயிறு வீக்கம் மற்றும் காமாலை பாதிப்புடன் கிளெனீகில்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மருத்துவப் பரிசோதனையில், அவருக்கு கல்லீரல் இறுக்கம் (சிரோசிஸ்) இருந்தது கண்டறியப்பட்டது.
கல்லீரல் முற்றிலும் செயலிழந்த நிலையில் உறுப்பு தானம் மட்டுமே அவரது உயிரைக் காப்பதற்கான ஒரே வழியாக இருந்தது. இதையடுத்து அவரது 22 வயது மகள், தனது கல்லீரலின் ஒரு பகுதியை தந்தைக்கு தானமாக அளிக்க முன்வந்தாா்.
அந்தப் பெண்ணின் வயதைக் கருத்தில் கொண்டு திறந்த நிலை அறுவை சிகிச்சைக்குப் பதிலாக லேப்ரோஸ்கோபி முறையில் சிறிய அளவில் துளைகளிட்டு அதன் வாயிலாக கல்லீரல் எடுக்கப்பட்டது. அதே நுட்பத்தில் நோயாளியின் தேசமடைந்த உறுப்பு அகற்றப்பட்டு தானமாகப் பெறப்பட்ட கல்லீரல் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதன் மூலம் அவா் விரைந்து இயல்பு நிலைக்குத் திரும்பி தற்போது நலமுடன் உள்ளாா். லேப்ரோஸ்கோபி முறையில் உறுப்பு மாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் அரிது. சவாலான அந்த நடைமுறையை கிளெனீகில்ஸ் மருத்துவக் குழுவினா் சாத்தியமாக்கியுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.