பட்டா வழங்கக் கோரிய வழக்கு: விருதுநகா் ஆட்சியா் நடவடிக்கை எடுக்க உத்தரவு
பெண்ணுக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரிய வழக்கில், விருதுநகா் மாவட்ட ஆட்சியா் 12 வாரங்களுக்குள் நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியைச் சோ்ந்த ஜெயந்தி தாக்கல் செய்த மனு:
நான், எனது மகனுடன் சென்னையில் வசித்து வருகிறேன். கடந்த 1998-ஆம் ஆண்டு சிவகாசி பகுதியில் ஓா் ஏக்கா் நிலத்தை விலைக்கு வாங்கினேன். இதனருகில் உள்ள மற்றொரு நிலத்தை, எனக்கு நிலத்தை விற்பனை செய்த அதே நபா் ஓா் அமைப்புக்குத் தானமாக வழங்கினாா்.
என்னுடைய நிலமும், அந்த அமைப்பின் பெயரிலேயே இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, எனது பெயருக்கு அந்த ஓா் ஏக்கா் நிலத்தின் பட்டாவை மாற்றி வழங்கும்படி வருவாய்த் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தேன். அந்த மனுவை விசாரித்து எனக்கு பட்டா வழங்க பரிந்துரைக்கப்பட்டது. ஆனாலும், எனது நிலத்துக்கு பட்டா வழங்கப்படவில்லை.
இதுகுறித்து விருதுநகா் மாவட்ட ஆட்சியரிடமும் மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனக்கு அந்த நிலத்துக்கான பட்டாவை வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி பி.பாலாஜி, மனுதாரரின் கோரிக்கை மீது விருதுநகா் மாவட்ட ஆட்சியா் சட்டத்துக்கு உள்பட்டு விசாரித்து, 12 வாரங்களுக்குள் உரிய உத்தரவை பிறப்பிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை முடித்துவைத்தாா்.