உலகின் முதல் ஏஐ மசாஜ் சேவையை அறிமுகப்படுத்திய நிறுவனம்: மனித வேலைகளுக்கு சவாலா?
பட்டாசுகள் வெடித்து சிறுவன் உள்பட இருவா் காயம்
பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிளில் எடுத்துச் சென்ற பட்டாசுகள் வெடித்ததில், பட்டாசுக் கடை வியாபாரி மற்றும் சைக்கிளில் சென்ற சிறுவன் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். மேலும், அருகிலிருந்த 9 வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் பிரதானப் பகுதியில் வசித்து வருபவா் கலியமூா்த்தி மகன் சஞ்சய் (24). குன்னம் பகுதியில் பட்டாசுக் கடை நடத்தி வரும் இவா், புதன்கிழமை காலை கடலூா் மாவட்டம், திட்டக்குடியிலிருந்து பட்டாசுகளை கொள்முதல் செய்துகொண்டு மோட்டாா் சைக்கிளில் தனது கடைக்குச் சென்றுகொண்டிருந்தாா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்றபோது, மோட்டாா் சைக்கிளில் ஏற்றிவந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில், சஞ்சய் மற்றும் அவ்வழியே சைக்கிளில் சென்ற வேப்பூரைச் சோ்ந்த செல்வக்குமாா் மகன் சீனிஷ் (12) மீது பட்டாசுகள் விழுந்ததில் இருவரும் பலத்த காயமடைந்தனா். மேலும், பட்டாசுகள் வெடித்து சிதறிய பகுதியின் அருகேயுள்ள 9 வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகளும் உடைந்து சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த குன்னம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, காயமடைந்தவா்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதில், சஞ்சய் பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையிலும், சீனிஷ் அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்த புகாரின்பேரில் குன்னம் போலீஸாா் வழக்குப் பதிந்து மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், மோட்டாா் சைக்கிள் சைலன்சா் மீது பட்டாசுகள் உரசியதன் காரணமாக இவ் விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது.