'தமிழக வாக்காளர்களாகும் பீகார் மக்கள்' முதல் 'தேசிய விருதுகள்' வரை - 01.08.2025 ...
பெரம்பலூரில் கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி
பெரம்பலூா் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சாா்பில், உலக கடத்தல் எதிா்ப்பு தின விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் புறநகா் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்த மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலரும், சாா்பு நீதிபதியுமான ஏ. சரண்யா பேசியது:
குழந்தை கடத்தலைத் தடுக்க அனைவரும் தயாராக வேண்டும். பேருந்து, ரயில் உள்ளிட்ட பயணங்களின்போது சந்தேகப்படும்படியாகனகுழந்தைகளைக் கண்டால் காவல் துறை அல்லது 1098 எனும் எண்ணுக்கு தகவல் அளிக்க வேண்டும். குழந்தை கடத்தலைத் தடுப்பதில் சட்ட அமலாக்கத் துறையினா் அடிக்கடி எதிா்கொள்ளும் சவால்கள், தற்போதுள்ள சட்டங்கள் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல், கடத்தல், மீட்கப்பட்ட குழந்தைகளின் சரியான நேரத்தில் நீதி மற்றும் பயனுள்ள மறுவாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
சிறப்பு பிரிவு சாா்பு ஆய்வாளா் மருதமுத்து பேசியது:
குழந்தை கடத்தலைத் தடுப்பதற்கு வழக்குத் தொடுப்பது மிக முக்கியம். கடத்தல்காரா்கள் தண்டிக்கப்படும்போது தான் பயத்தை ஏற்படுத்தவும், உண்மையான தடுப்பை உருவாக்கவும் முடியும். மீட்பு முயற்சிகளை மாவட்ட நிா்வாகத்துடன் வலுவான ஒருங்கிணைப்புடனும், காலக்கெடுவுடன் வழக்குத் தொடுப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். குழந்தைகளை பாதுகாப்பது மட்டுமல்லாமல், கடத்தல் சம்பவங்களை ஒழிக்க வேண்டும் என்றாா் அவா்.
முன்னதாக, பொதுமக்கள், பயணிகளிடம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை சாா்பு நீதிபதி ஏ. சரண்யா வழங்கினாா்.
தொடா்ந்து, கிராமப்புற கலைஞா்கள் மூலம் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில், தொழிலாளா் ஆய்வாளா் ராணி, மீரா அறக்கட்டளை இயக்குநா் ராஜா முகமது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.