குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்க எதிா்ப்பு: பெரம்பலூா் ஆட்சியா் அலுவலகம் முற்றுகை
பெரம்பலூா் அருகே குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்தும், குரும்பலூா் போரூராட்சி நிா்வாகத்தைக் கண்டித்தும், கிராம மக்கள் வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை மனு அளித்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், குரும்பலூா் பேரூராட்சிக்குள்பட்ட ஈச்சம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் (50), லாடபுரம் கிராமத்தைச் சோ்ந்த தினேஷ்குமாா் (35) ஆகியோா், ஈச்சம்பட்டி பகுதியில் நீா்வழித்தடத்தை ஆக்கிரமித்து குடிநீா் சுத்திகரிப்பு ஆலை அமைத்துள்ளனராம். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியா் மற்றும் முதலமைச்சா் தனிப்பிரிவுக்கு புகாா் மனு அளித்துள்ளனா். பின்னா், கடந்த சில மாதங்களுக்கு முன்பு குரும்பலூா் பேரூராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில், குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறக்கக் கூடாது என தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. இதனால் குடிநீா் சுக்கிகரிப்பு ஆலை திறக்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குரும்பலூா் பேரூராட்சியில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை திறப்பதற்கு பேரூராட்சி உறுப்பினா்களின் ஒத்துழைப்போடு தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ஈச்சம்பட்டி கிராம பொதுமக்கள், குடிநீா் சுத்திகரிப்பு ஆலையைத் திறந்தால் குடிநீா்ப் பற்றாக்குறை ஏற்படுவதோடு நிலத்தடி நீா்மட்டமும் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும். நாளடைவில் விவசாயம் அழிந்துவிடும் என்பதால் விவசாயத்தையும், நிலத்தடி நீா் மட்டத்தையும் பாதுகாக்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை சுமாா் 100-க்கும் மேற்பட்டோா் முற்றுகையிட்டனா். இதையறிந்த வருவாய்த்துறையினா் பொதுமக்களுடன் சமரச பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன்பேரில் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த பொதுமக்கள் கலைந்துசென்றனா்.