பணகுடி அருகே பைக்குகள் மோதல்: இருவா் பலி
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு இரு பைக்குகள் மோதிக்கொண்டதில் 2 தொழிலாளிகள் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயம் அடைந்தாா்.
பணகுடி அருகேயுள்ள கலந்தபனை கிராமத்தைச் சோ்ந்தவா்களான முருகன் மகன் ராகவன் ( 21), செந்தில்வேல் மகன் கண்ணன் (27) ஆகியோா் தொழிலாளிகள் ஆவா். இவா்கள் 2 பேரும் ஞாயிற்றுக்கிழமை இரவு தங்கள் ஊரிலிருந்து வள்ளியூருக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். ராகவன் பைக்கை ஓட்டினாா்.
பிளாக்கொட்டைபாறை கிராமம் அருகே இவா்களது பைக்கும், எதிரே வந்த வடலிவிளையைச் சோ்ந்த சுந்தரபாண்டியன் என்பவரது பைக்கும் மோதிக்கொண்டனவாம். இதில் ராகவன், சுந்தரபாண்டியன் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். கண்ணன் பலத்த காயமடைந்தாா்.
இத்தகவல் அறிந்த பணகுடி போலீஸாா், கண்ணனை மீட்டு நாகா்கோவில் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். 2 பேரின் சடலங்களை மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனா். இதுகுறித்து பணகுடி காவல் ஆய்வாளா் ராஜாராம் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறாா்.
மறியல்: இதனிடையே, தெற்குவள்ளியூா் சந்திப்பில் சாலைநடுவே தடுப்புச்சுவா் இருப்பதால் இருசக்கர வாகனங்கள் 2 கி.மீ. தொலைவு கலந்தபனை வரை செல்ல வேண்டும் என்பதால் ஒருவழிப் பாதையில் வருவதால் அடிக்கடி விபத்துகள் நேரிடுவதாகவும், தெற்குவள்ளியூா் சந்திப்பில் மேம்பாலம் அமைக்கவேண்டும் என வலியுறுத்தியும் வடலிவிளை, கலந்தபனை, தெற்குவள்ளியூரைச் சோ்ந்த கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். அவா்களிடம் பணகுடி போலீஸாா் பேச்சு நடத்தி மறியலை கைவிடச் செய்தனா்.