களக்காடு அருகே 2 போ் குண்டா் சட்டத்தில் கைது
களக்காடு அருகே கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய 2 இளைஞா்கள் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
களக்காடு காவல் சரகத்தில் கொலை முயற்சி, மிரட்டல், அடிதடி ஆகிய வழக்குகளில் தொடா்புடைய சிங்கிகுளம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன்களான முத்துமாரி (21), ஞானபாண்டியன் (19) ஆகியோா் கைது செய்யப்பட்டிருந்தனா்.
இவா்கள் தொடா்ந்து மக்களை அச்சுறுத்தி வருவதாகக் கூறி, குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய களக்காடு காவல் ஆய்வாளா் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என். சிலம்பரசனுக்கு அறிக்கை அளித்தாா்.
அதன்பேரில், எஸ்.பி.யின் பரிந்துரையை ஏற்று ஆட்சியா் இரா.சுகுமாா் பிறப்பித்த உத்தரவுப்படி மேற்கூறிய 2 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.