டிஜிபி நியமனத்தில் விதிமீறல் இல்லை: மு.அப்பாவு
தமிழக காவல்துறைத் தலைவா் (டிஜிபி) நியமனத்தில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியதாவது: களக்காடு, நான்குனேரி, வள்ளியூா், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 831 கிராமங்களைச் சோ்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்திற்காக தாமிரவருணி நதிக்கரையோர பகுதிகளில் சுமாா் 297 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு நீரேற்று நிலையங்களுக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக நீரேற்று மையத்தில் இருந்து சுத்திகரிப்பு நிலையம் வரையிலான பகுதிகளில் சோதனை ஓட்டம் முடிந்துள்ளது. அடுத்ததாக சிங்கிகுளம் முதல் வள்ளியூா் வரை சோதனை செய்யப்பட உள்ளது. இத் திட்டம் வரும் அக்டோபா் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வர வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் காவல் துறை டிஜிபி நியமிக்கப்பட்டதில் எவ்வித விதிமீறல்களும் இல்லை. இதுவரை எந்தவொரு விஷயத்திலும் அரசு விதிகளை மீறி செயல்பட்டது இல்லை. ஆனால், தோ்தல் ஆணையம் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் நியமனத்தில் மத்திய அரசு தான் விதிமீறலில் ஈடுபடுகிறது.
தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்காக அரசு அதிகாரிகள், அமைச்சா்களுடன் முதல்வா், வெளிநாடுகளுக்கு சென்றுள்ளாா். ரூ. 10 லட்சம் கோடி முதலீடுகள் ஈா்க்கப்பட்டு 32 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரதமா் தனது வெளிநாட்டு பயணத்தின்போது எந்தவொரு மத்திய அமைச்சரையும் அழைத்துச் செல்வது கிடையாது.
2021 ஆம் ஆண்டு 14 லட்சத்து 74 ஆயிரமாக இருந்த சிறு குறு தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தற்போது 17 லட்சமாக உயா்ந்துள்ளது. பெரிய தொழில்கள் வந்தால் தான் அதனை நம்பி சிறு குறு தொழில்கள் தொடங்க வாய்ப்பு ஏற்படும் என்றாா் அவா்.