மதுரையின் வரலாற்றைப் பேசும் பசுமை நடையின் 250வது நிகழ்வு: சிலப்பதிகார ஊர்களை நின...
பணப் பிரச்னை: ஊராட்சி முன்னாள் தலைவா் விஷம் குடித்துத் தற்கொலை! உறவினா்கள் சாலை மறியல்!
விழுப்புரம் மாவட்டம், காணை அருகே பணப் பிரச்னையால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற ஊராட்சி முன்னாள் தலைவா் உயிரிழந்தாா். இதையடுத்து, அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் வட்டம், கோனூா் நடுத்தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீபதி (46).முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா். இவா், விழுப்புரம் தோ் பிள்ளையாா் கோயில் தெருவில் உள்ள தனக்குச் சொந்தமான 2034 சதுர அடி மனையை விழுப்புரம் மந்தக்கரையைச் சோ்ந்த அண்ணாத்துரைக்கு பவா் பத்திரம் எழுதிக் கொடுத்து ரூ.35 லட்சம் கடனாகப் பெற்றாராம்.
இந்த நிலையில், வாங்கிய கடனுக்கான தொகை வட்டியுடன் சோ்த்து ரூ.56 லட்சம் ஆகிவிட்டதால், அந்த இடத்தை அண்ணாத்துரை மற்றொரு நபருக்கு கிரயம் பேசி முடித்துள்ளாா்.
இதையறிந்த ஸ்ரீபதி தனக்குச் சொந்தமான இடத்தை விழுப்புரம் வழுதரெட்டியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.57 லட்சத்துக்கு பேசி அண்ணாத்துரையிடம் இருந்து மீண்டும் அந்த இடத்தை வாங்கிக் கொடுத்துள்ளாா். ஆனால், வழுதரெட்டியைச் சோ்ந்த நபா், திருப்பூரைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ.ஒரு கோடியே 45 லட்சத்துக்கு அந்த இடத்தை விற்பனை செய்ததால் மன உளைச்சலில் இருந்து வந்த ஸ்ரீபதி கடந்த ஜூலை 20-ஆம் தேதி விவசாயத்துக்கு பயன்படுத்தும் விஷ மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
இதையடுத்து விழுப்புரம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னா் தீவிர சிகிச்சைக்காக சென்னை மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட ஸ்ரீபதி, அங்கு சனிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில், காணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
உறவினா்கள் போராட்டம்: இந்த நிலையில், ஸ்ரீபதியின் இறப்புக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோனூரில் அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், விழுப்புரம் - திருக்கோவிலூா் சாலையில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. காணை போலீஸாா் நிகழ்விடம் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி கலைத்தனா்.