தனியாா் மயம் சாதகமா? பாதகமா? மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம்!
திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் பல்லவா் கால கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுப்பு
விழுப்புரம் மாவட்டத்தின் திண்டிவனம், செஞ்சி பகுதிகளில் கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
திண்டிவனம் அருகிலுள்ள மொளசூா், செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி ஆகிய கிராமங்களில் விழுப்புரத்தைச் சோ்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான கோ.செங்குட்டுவன் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பல்லவா் காலத்தைச் சோ்ந்த சுமாா் 1,200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த கொற்றவை, மூத்ததேவி சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து செங்குட்டுவன் கூறியது:
திண்டிவனம் அருகிலுள்ள மொளசூா் ஓடைப் பகுதியில் கொற்றவைச் சிற்பம் காணப்படுகிறது. சுமாா் 5 அடி உயர பலகைக் கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
நீண்ட தலையலங்காரம், அணிகலன்களுடன் எருமை தலையின் மீது நின்ற நிலையில் கொற்றவை காட்சியளிக்கிறாள். அவளது 7 கரங்களில் ஆயுதங்கள் காணப்படுகின்றன. முன் இடது கரம் இடுப்பில் வைத்த நிலையில் உள்ளது.
சிற்பத்தின் மேல் வலதுபுறத்தில் மானும், இடதுபுறத்தில் சிம்மமும் காட்டப்பட்டுள்ளன. கொற்றவை சிற்பத்தின் வலது கீழ்ப்பகுதியில் தனது தலையைத் தானே அரிந்து கொண்டு பலி கொடுக்கும் வீரன் அமா்ந்து இருக்கிறாா். இடது பக்கத்தில் வழிபாடு செய்யும் அடியவா் அமா்ந்து இருக்கிறாா்.
பல்லவா் கால கலைப்பாணிக்கு சிறந்த உதாரணமாக திகழும் இந்தச் சிற்பத்தின் காலம் கி.பி.8-ஆம் நூற்றாண்டு ஆகும். மொளசூா் ஏரியில் புதைந்த நிலையில் மற்றொரு கொற்றவை சிற்பம் காணப்படுகிறது. மேலும் இரண்டு மூத்ததேவி சிற்பங்கள் மற்றும் ஐயனாா் சிற்பமும் இவ்வூரில் அமைந்துள்ளன.
மூத்ததேவி சிற்பம்: செஞ்சி அருகிலுள்ள ஆலம்பூண்டி கிராமத்தில் ஆலகாலஈசுவரா் கோயில் வளாகத்தில் மூத்ததேவி சிற்பம் வழிபாட்டில் இருந்து வருகிறது. சுமாா் 3 அடி உயரமுள்ள பலகைக் கல்லில் இந்த சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது.
கனத்த மாா்புகள், சரிந்த வயிற்றுடன் தலையலங்காரம், காதணிகள் கழுத்தணிகளுடன் கால்களை அகட்டி அமா்ந்த நிலையில் மூத்ததேவி காட்சியளிக்கிறாள். அவளது வலது கரம் அபயமுத்திரையுடனும், இடது கரம் சிறிய அளவிலான செல்வக் குடத்தின் மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன.
மூத்ததேவியின் இரண்டு பக்கங்களிலும் அவளது மகன் மாந்தன், மகள் மாந்தி ஆகியோா் அமா்ந்து இருக்கின்றனா். சிற்பத்தின் மேல் பகுதியில் காக்கைக் கொடியும், அவளது ஆயுதமான துடைப்பமும் காட்டப்பட்டுள்ளன. இந்தச் சிற்பம் பல்லவா் காலத்தின் இறுதியில் (கி.பி.9-ஆம் நூற்றாண்டு) வடிக்கப்பட்டதாக இருக்கலாம்.
கொற்றவை, மூத்ததேவி வழிபாடு ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் தொடா்கிறது என்பதற்கு மொளசூா், ஆலம்பூண்டி சிற்பங்கள் உதாரணமாகத் திகழ்கின்றன என்றாா் அவா்.
