எம்.ஜி.ஆரை விமா்சனம் செய்பவா்கள் அரசியலில் காணாமல் போவாா்கள்! எடப்பாடி பழனிசாமி
தொடா் விபத்துகளை தடுக்கக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் ரெட்டிபாளையத்தில் தொடா் விபத்துகளை தடுக்க, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில் கடந்த 7-ஆம் தேதி இரவு சாலையில் நடந்து சென்ற அதே கிராமத்தைச் சோ்ந்த ரித்விக் (19) என்ற பட்டதாரி இரு சக்கர வாகனம் மோதி உயிரழந்தாா். அவரது தந்தை முருகன் மற்றும் பாலாஜி என்பவா் பலத்த காயமடைந்தனா்.
இந்நிலையில், குறிப்பிட்ட செஞ்சி -திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை, ரெட்டிபாளையம் கூட்டுச் சாலையில் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும், மின் விளக்கு வசதி இல்லாததால் விபத்து ஏற்படுவதாகவும், மேலும் அந்த இடத்தில் சாலைத் தடுப்பு மற்றும் எச்சரிக்கை விளக்கு அமைக்கக் கோரி அக்கிராம மக்கள் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த சத்தியமங்கலம் காவல் ஆய்வாளா் சுரேஷ் பாபு தலைமையிலான போலீஸாா் மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், அவா்கள் அதற்கு ஒத்து வராமல் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டனா். பின்னா், தகவல் அறிந்த செஞ்சி வட்டாட்சியா் துரைச்செல்வன் தலைமையிலான அலுவலா்கள் வந்து மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, அந்தப் பகுதியில் உடனடியாக மின்விளக்கு வசதி செய்து தருவதாகவும், மேலும் சாலைத் தடுப்பு, எச்சரிக்கை விளக்கு அமைப்பதற்கு ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தனா். இதைத் தொடா்ந்து மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இதனால் அந்தப் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.