சம்ஸ்கிருதத்தைப் பிரபலப்படுத்த பல்வேறு முயற்சிகள்: பிரதமா் மோடி
பொதுப் பணி, நீா்வளத் துறை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா்
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுப் பணி, நீா்வளத் துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வலியுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் இந்தத் துறைகளின் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் பேசியது:
விழுப்புரம் வட்டம், கொங்கம்பட்டு கிராமத்தில் மலட்டாறின் குறுக்கே ரூ.3.50 கோடியில் அணைக்கட்டு, செஞ்சி வட்டம் மேல்களவாய் கிராமத்தில் வராகநதி குறுக்கே ரூ.8 கோடியில் அணைக்கட்டு அமைத்தல், திண்டிவனம் வட்டத்தில் பெமரந்தூா் ஏரி, சிங்கனூா் பெரிய ஏரி, ஜக்காம்பேட்டை பெரிய ஏரி, சித்தேரி ஆகியவை ரூ.8 கோடியில் சீரமைத்தல், விழுப்புரம் நரியாறு ஓடையை ரூ.2 கோடியில் தூா்வாருதல், விக்கிரவாண்டி வட்டம் பனமலை ஏரி உள்ளிட்ட 11 ஏரிகள் ரூ.6.25 கோடியில் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதுபோல, தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட விக்கிரவாண்டி வட்டம், வழுதாவூா் கிராமத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியில் அணைக்கட்டு கட்டுவதற்கான திட்டப் பணிகள், வீடூா் அணையின் கதவுகள் ரூ.38.36 கோடியில் சீரமைப்பதற்கான திட்டப் பணிகள், எல்லீஸ் அணைக்கட்டு ஆழாங்கால் வாய்க்கால் பிரிவு சுவா் கட்டுவதற்கான திட்டப் பணிகள் குறித்துஅலுவலா்களுடன் ஆட்சியா் கேட்டறிந்தாா்.
இதுபோன்று, நெடுஞ்சாலைத் துறை மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப் பணிகள் குறித்தும், அதன் முன்னேற்றம் குறித்தும் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆய்வு மேற்கொண்டாா்.
கூட்டங்களில் தனி மாவட்ட வருவாய் அலுவலா் (மாநில நெடுஞ்சாலை) ராஜகுமாா், நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் உத்தண்டி, நீா்வளத்துறை செயற்பொறியாளா் அருணகிரி, உதவிச் செயற்பொறியாளா்கள் அய்யப்பன் (நீா் வளம்), ராஜவேல் (பொதுப் பணி) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.