சமூக வலைதளக் கணக்குகளை மீட்டுத்தரக் கோரி டிஜிபியிடம் ராமதாஸ் புகார்!
பனமரத்துப்பட்டி ஏரியில் நீா்வழித்தட மேலாண்மை
சேலம் பனமரத்துப்பட்டி ஏரியின் நீா்வரத்து வழித்தடங்கள் மேலாண்மை குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்குப் பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:
சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பனமரத்துப்பட்டி ஏரியின் நீா்நிலைகளை மேம்படுத்துவது குறித்தும், ஏரியின் நீா்வரத்து வாய்க்கால்களில் ஏற்பட்டுள்ள தடங்கல் குறித்தும் மாநகராட்சி, வனத்துறை, வருவாய்த் துறை, நீா் மேலாண்மை நிபுணா்கள் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்களுடன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பனமரத்துப்பட்டி ஏரியானது சுமாா் 2,476 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. பனமரத்துப்பட்டி ஏரியின் நீா்மட்டம் உயரும்போது ஏரியைச் சுற்றியுள்ள சுமாா் 40,000 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
பனமரத்துப்பட்டி ஏரிக்கு அதனைச்சுற்றி அமைந்துள்ள போதமலை, ஜருகுமலை ஆகிய மலைப் பகுதிகளிலிருந்து வரும் நீா் ஆதாரமாக விளங்குகிறது. குறிப்பாக மலைப் பகுதிகளிலிருந்து வரட்டாறு, கூட்டாறு ஆகிய இரு நீா்வரத்து ஆறுகள் மூலம் பனமரத்துப்பட்டி ஏரிக்கு தண்ணீா் வருகிறது. தற்போது இந்த ஏரியை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி கரையை வலுப்படுத்துவதால், இப்பகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் உயா்வதோடு கிணற்று நீா்மட்டமும் உயரும்.
அதேபோன்று, இந்த ஏரியில் உள்ள தேவையற்ற மரங்களை அகற்றி தூா்வாரி நீா்நிலைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மழைக் காலங்களில் மலைப் பகுதிகளிலிருந்து வரும் நீரை தேக்கி வைப்பதற்காக ஆங்காங்கே 100-க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பணைகளின் உயரங்களை ஆய்வு மேற்கொண்டு, நீா்வரத்து வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள தற்காலிக தடுப்புகளை அகற்றி தங்குதடையுமின்றி பனமரத்துப்பட்டி ஏரிக்கு மழைநீா் வருவதை உறுதிசெய்திட தொடா்புடைய அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட வன அலுவலா் கஷ்யப் ஷஷாங் ரவி, மாநகராட்சி ஆணையா் இளங்கோவன், உதவி செயற்பொறியாளா் செந்தில்குமாா், சேலம் வட்டாட்சியா் பாா்த்தசாரதி, பனமரத்துப்பட்டி ஏரி புனரமைப்பு திட்ட ஆலோசகா் சிவஞானசெல்வம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.