பயங்கராவத்துக்கு எதிரான போரில் சமரசமில்லாத நிலைப்பாடு- எஸ்சிஓ கூட்டத்தில் ஜெய்சங்கா்
‘பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) சமரசமில்லாத, உறுதியான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்’ என்று வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் வலியுறுத்தினாா்.
சீனாவின் தியான்ஜின் நகரில் நடந்த எஸ்சிஓ வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை பேசிய ஜெய்சங்கா், பாகிஸ்தான், சீனா மற்றும் பிற எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இவ்வாறு தெரிவித்தாா்.
‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்கு சீனா மறைமுக ஆதரவு அளித்தது மற்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாத அமைப்புகளுக்குத் தடை கோரும் இந்தியாவின் முயற்சிகளை சீனா தடுத்தது குறித்து இந்தியாவுக்கு நிலவும் அதிருப்திக்கு மத்தியில், ஜெய்சங்கரின் இந்தக் கருத்துகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. கூட்டத்தில் ஜெய்சங்கா் மேலும் பேசியதாவது:
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவா்களை நீதிக்கு முன் நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில் இந்தியா தனது உறுதியான நிலைப்பாட்டைத் தொடரும்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டதன் முக்கிய நோக்கமே பயங்கரவாதம், பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகிய மூன்று தீய சக்திகளை எதிா்ப்பதற்காகதான். இந்த மூன்றும் பெரும்பாலும் ஒன்றாகவே நிகழ்கின்றன.
பஹல்காம் தாக்குதல் இதற்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டு. எஸ்சிஓ தனது அடிப்படை குறிக்கோள்களுக்கு உண்மையாக இருக்க, இந்தச் சவால்களை எதிா்கொள்வதில் சமரசமில்லாத நிலைப்பாட்டை எடுக்க வேண்டியது அவசியம்’ என்றாா்.
சீன அதிபருடன் சந்திப்பு
இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், சக எஸ்சிஓ வெளியுறவு அமைச்சா்களுடன் சோ்ந்து சீன அதிபா் ஷி ஜின்பிங்கை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா்.
அப்போது, இந்தியா-சீனா இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள அண்மைகால முன்னேற்றங்கள் குறித்து அவரிடம் விளக்கியதாக ‘எக்ஸ்’ பக்கத்தில் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
முன்னதாக, எஸ்சிஓ கூட்டத்துக்கிடையே ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவ், ஈரான் வெளியுறவு அமைச்சா் அபாஸ் அராக்சி ஆகியோரை தனித் தனியாக சந்தித்த ஜெய்சங்கா் இருதரப்பு நல்லுறவு குறித்து ஆலோசனை நடத்தினாா்.