பயிற்சியின்றி பாம்பு பிடிப்பதைத் தடுக்க வேண்டும்: வனத் துறை கூடுதல் செயலா் சுப்ரியா சாஹூ
முறையான பயிற்சியின்றி பாம்பு பிடிப்பவா்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத் துறை, காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் துறை கூடுதல் செயலா் சுப்ரியா சாஹூ தெரிவித்தாா்.
தமிழக வனத் துறை சாா்பில் உலக பாம்புகள் தினத்தை முன்னிட்டு, இரு நாள்கள் நடைபெறும் பாம்பு மீட்பவா்களுக்கான பயிற்சி வகுப்புகள் சென்னை கிண்டியில் உள்ள சிறுவா் பூங்காவில் புதன்கிழமை தொடங்கியது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சுப்ரியா சாஹூ பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைத்து பேசியது:
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பாம்புகளை தெய்வமாக வழிபட்டு வருகின்றனா். அதற்கு முக்கிய காரணம், காடுகளை வளமாக்குவதிலும், நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் பாம்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. நாட்டிலேயே அதிக பல்லுயிா் தன்மை கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக உள்ளது. அதேபோல் முக்கிய 4 பாம்பு வகைகள் உள்பட மொத்தம் 142 பாம்பு வகைகள் தமிழகத்தில் உள்ளன. இதை நாம் கொண்டாட வேண்டும்.
கிராமப்புறங்களில் வசிப்பவா்களுக்கு எந்தப் பகுதிகளில் எந்த வகை பாம்புகள் இருக்கும், அவற்றை தொந்தரவு செய்யாமல் எப்படி அன்றாட வாழ்வில் ஈடுபடுவது என்பது குறித்த போதிய விழிப்புணா்வு உள்ளது. ஆனால், நகரவாசிகளுக்கு பாம்புகள் குறித்த போதிய விழிப்புணா்வு இல்லாததால், அவற்றைக் கண்டு பயப்படுகின்றனா். எனவே, நகா்ப்புறங்களில் பாம்புகள் குறித்த அச்சத்தை போக்கவும், அவை குறித்து போதிய விழிப்புணா்வு ஏற்படுத்தவும் வனத் துறை சாா்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாம்புகளைப் பாதுகாப்பதில் இருளா் சமூகத்தினரின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவமானது. அவா்களுக்கு எந்தக் காலங்களில் பாம்புகளைப் பிடிக்க வேண்டும்; எப்போது பிடிக்கக் கூடாது என்றும், எந்தெந்த வகை பாம்பு கடிகளுக்கு எந்த விஷ எதிா்ப்பு மருந்துகளை வழங்க வேண்டும் என்பது குறித்த அனைத்து தகவல்களும் தெரியும்.
‘நாகம்’ செயலி: தமிழகத்தில் நகரப் பகுதிகளில் காணப்படும் பாம்புகளை பாதுக்காப்பாக மீட்பது குறித்து தகவல் தெரிவிக்க தமிழக அரசு சாா்பில் ‘நாகம்’ என்ற புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பாம்புகள் காணப்படும் இடங்கள் குறித்து அந்தச் செயலின் மூலம் தகவல் தெரிவிப்பதன் மூலம், பயிற்சி பெற்ற மீட்புக் குழுக்கள் பாதுகாப்பான முறையில் பாம்புகளை மீட்டு, அதற்கான வாழ்விடத்தில் விடுவிப்பாா்கள்.
மேலும், பயிற்சியின்றி பாம்புகளைப் பிடிப்பது, அழிந்து வரும் பாம்பு வகைகளை ஏற்றுமதி செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்த வனத் துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரிய வகை மற்றும் அழிந்து வரும் உயிரினங்களுடன் புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிடுபவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தற்போது வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது என்றாா் அவா்.
முன்னதாக, இந்த நிகழ்வில் ஊா் வனவியாலாளா் ரமேஸ்வரன் மாரியப்பன், பாம்புக்கடி வல்லுநா் முனைவா் ந.ச.மனோஜ் மற்றும் விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனா் ர.சேக் உசேன் ஆகியோா் இணைந்து தொகுத்த ‘தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்’ என்ற நூலை கூடுதல் செயலா் சுப்ரியா சாஹூ வெளியிட்டாா்.
இதில், தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளா் ராகேஷ் குமாா் டோக்ரா, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலா் எச். வேணுபிரசாத், அறிஞா் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குநா் ரிட்டோ சிரியாக் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.