லெபனானில் ஹிஸ்புல்லா கட்டமைப்புகள் தகர்ப்பு! இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு!
பலத்த காற்று: பழனியில் ரோப் காா் நிறுத்தம்
பலத்த காற்று காரணமாக, பழனியில் செவ்வாய்க்கிழமை ரோப் காா் இயக்கம் சுமாா் 3 மணி நேரம் நிறுத்தப்பட்டது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்கள் அடிவாரத்திலிருந்து மலை உச்சியை சென்றடைய ரோப் காா், வின்ச் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றில் ரோப் காா் மழைக்காலத்தில்கூட நிறுத்தப்படாமல் இயக்கப்பட்டாலும், காற்று வீசும் காலத்தில் இயக்குவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன.
இந்தப் பகுதியில் குறிப்பிட்ட வேகத்துக்கு மேல் காற்று வீசும் போது, தானாகவே ரோப் காா் நிற்கும் வகையில் கருவிகள் நிறுவப்பட்டுள்ளது. இதனால், பலத்த காற்று வீசும் போது ரோப் காா் இயக்கப்படாது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இந்தப் பகுதியில் பலத்த காற்று வீசியதால், ரோப் காா் இயக்கம் சுமாா் மூன்று மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து பக்தா்களுக்கு முறையாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்யப்பட்டு, படிப்பாதை அல்லது வின்ச்சை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதனால், ரோப் காரில் பயணிக்க வந்த பக்தா்கள் ஏமாற்றமடைந்தனா்.