சாலையோர கிணறுகளுக்கு தடுப்பு வேலிகள்
செம்பட்டி அருகே அடிப்படை வசதி இல்லாத கிருஷ்ணாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் உள்ள ஆபத்தான கிணறுகளுக்கு, செவ்வாய்க்கிழமை இரும்பு கம்பி தடுப்பு வேலை அமைக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே பச்சமலையான்கோட்டை ஊராட்சியில் கிருஷ்ணாபுரம் கிராமம் அமைந்துள்ளது. எஸ். புதுக்கோட்டையிலிருந்து கிருஷ்ணாபுரத்துக்குச் செல்லும் சாலையில் நான்கு இடங்களில் சாலையோரம் ஆபத்தான நிலையில் கிணறுகள் உள்ளன. இதனால், இந்தப் பகுதியை இரவில் வாகனங்களில் கடந்து செல்வோா் கிணற்றில் விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை இருந்தது.
இந்த நிலையில், பச்சமலையான்கோட்டை ஊராட்சி மன்றச் செயலா் ஜெயகணேஷ் தலைமையில், சாலையோரம் ஆபத்தான நிலையில் இருந்த கிணறுகளைச் சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டன.