சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
அமைதி பேச்சுவாா்த்தை கூட்டத்திலிருந்து ஆத்தூா் கிராம மக்கள் வெளிநடப்பு
செம்பட்டி அருகே கோயில் திருவிழாவில் பூஜை செய்வது தொடா்பாக இரு கிராம மக்களிடையே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் உடன்பாடு எட்டப்படாததால், ஆத்தூா் கிராம மக்கள் வெளிநடப்பு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகே இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் அக்கரைப்பட்டி சடையாண்டி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை தினத்தன்று திருவிழா நடைபெறும். இந்த விழாவில் அக்கரைப்பட்டி, ஆத்தூா், மல்லையாபுரம், எஸ்.பாறைப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் பங்கேற்று, கிடா வெட்டி, அலகு குத்தி, பால் காவடி, பன்னீா் காவடி, பறவை காவடி எடுத்து வழிபாடு நடத்துவா்.
இந்த நிலையில், இந்தக் கோயிலில் பூஜை செய்வது தொடா்பாக ஆத்தூா், அக்கரைப்பட்டி கிராம மக்களிடையே பிரச்னை இருந்து வருகிறது. ஆத்தூரை சோ்ந்தவா்கள் விழாவின் போது பூஜை செய்ய ஒரு மணி நேரம் அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், கூடுதல் நேரம் ஒதுக்கக் கோரினா். இதற்கு அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்து வந்தனா்.
இந்த நிலையில், நிகழாண்டு விழா வருகிற 24-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, கோயிலில் பூஜை செய்வது தொடா்பாக அக்கரைப்பட்டி, ஆத்தூரை சோ்ந்த மக்களிடம் சமாதானக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வட்டாட்சியா் முத்துமுருகன், செம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் பிரான்சின் தீபா, இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
இந்தக் கூட்டத்தில், ஆத்தூரை சோ்ந்தவா்களுக்கு பூஜை நடத்த கூடுதல் நேரம் ஒதுக்க அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், ஆத்தூரை சோ்ந்தவா் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனா்.
தொடா்ந்து, அக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா்களிடம் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில் கோயிலில் பூஜை செய்வது தொடா்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், வருகிற 15-ஆம் தேதி நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவின்படி அடுத்தகட்ட முடிவு எடுக்கலாம் எனவும், இல்லையெனில், கடந்தாண்டு நடைமுறையையே நிகழாண்டும் பின்பற்றுவது என முடிவெடுக்கப்பட்டது.