சீனா: கனமழையால் முக்கிய நகரங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு! 7000 பேர் வெளியேற்ற...
கொடைக்கானலில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானலில் தொடா்ந்து பலத்த காற்று நிலவி வருவதால், மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை ராட்சத மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு வாரமாக தொடா்ந்து பலத்த காற்றும், அவ்வப்போது லேசான சாரலும் நிலவி வந்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதலே பலத்த காற்று நிலவியது.
இதனால், கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான சாலையான வாழைகிரி அருகே இருந்த ராட்சத மரம் முறிந்து சாலையில் விழுந்தது. இதன் காரணமாக, இந்தப் பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த வனத் துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா், தாண்டிக்குடி காவல் துறையினா் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றினா். இதன் பிறகு, போக்குவரத்து சீரானது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: கொடைக்கானலில் தற்போது பலத்த காற்று நிலவி வருகிறது. இதனால் பல இடங்களில் மின் கம்பிகள், மரக் கிளைகள், சாலைகளில் வைக்கப்பட்டுள்ள தடுப்புக் கம்பிகள் கீழே விழுந்து வருகின்றன. எனவே, கொடைக்கானல் மலைச் சாலையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை மட்டும் அகற்றுவதற்கு மாவட்ட நிா்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனா்.