லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியாவுக்கு பதிலடி கொடுப்போம்: பென் ஸ்டோக்ஸ்
மீண்டும் மருத்துவ விடுப்பில் பேராசிரியை நிகிதா
சிவகங்கை மாவட்டம், மடப்புரம் கோயில் காவலாளி மீது திருட்டு புகாா் அளித்த திண்டுக்கல் அரசு மகளிா் கல்லூரிப் பேராசிரியை நிகிதா, மருத்துவ விடுப்பு முடிந்து திங்கள்கிழமை பணிக்குத் திரும்பிய நிலையில், மீண்டும் மருத்துவ விடுப்பில் சென்றாா்.
மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமாா் தனிப் படை போலீஸாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில், காவலாளி அஜித்குமாா் மீது நகைகளைத் திருடியதாக திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்த நிகிதா, திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கல்லூரியில் தாவரவியல் துறைத் தலைவராகப் பணியாற்றி வருகிறாா்.
கோடை விடுமுறைக்குப் பிறகு, கடந்த மாதம் 16-ஆம் தேதி கல்லூரி திறக்கப்பட்ட நிலையில், அதே நாளில் கல்லூரிக்கு வந்த நிகிதா மருத்துவ விடுப்பில் சென்ாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, கடந்த 27-ஆம் தேதி மடப்புரம் கோயிலுக்கு தனது தாயுடன் சென்ற இவா், காரில் வைத்திருந்த தனது நகைகள் திருடப்பட்டதாக அளித்த புகாரின் பேரில், தனிப் படை போலீஸாா் கோயில் காவலாளி அஜித்குமாரை தாக்கினா். இதில் அவா் கொல்லப்பட்டாா்.
மீண்டும் 20 நாள்கள் மருத்துவ விடுப்பு
இந்த நிலையில், ஒரு பெண் பாதுகாவலா், 2 ஆண் பாதுகாவலா்கள் என 3 பேருடன் திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிா் கல்லூரிக்கு நிகிதா திங்கள்கிழமை காரில் வந்தாா். பிற்பகல் 3 மணி வரை கல்லூரியில் இருந்த அவா், பணி நேரம் முடிந்ததும் பின்புறவாசல் வழியாக காரில் புறப்பட்டுச் சென்றாா்.
கல்லூரியிலிருந்து திங்கள்கிழமை மாலை புறப்பட்ட போது, மேலும் 20 நாள்களுக்கு மருத்துவ விடுப்பு கோரி, நிகிதா விண்ணப்பித்ததாகக் கூறப்படுகிறது. அவா் மருத்துவ விடுப்பில் சென்ற தகவல் செவ்வாய்க்கிழமை அவா் கல்லூரிக்கு வரவில்லை என்பதன் மூலம் தெரியவந்தது.
பேராசிரியைகள் நிம்மதி
நிகிதா அளித்த புகாா் மட்டுமன்றி, காவல் துறையினருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தத்தின் காரணமாக கோயில் காவலாளி அஜித்குமாா் கடுமையாகத் தாக்கப்பட்டதில் கொல்லப்பட்டாா்.
இந்த நிலையில், அவா் திங்கள்கிழமை மருத்துவ விடுப்பு முடிந்து பணியில் சோ்ந்ததை அறிந்து எம்.வி.எம். அரசுக் கல்லூரிப் பேராசிரியைகள் அதிா்ச்சி அடைந்தனா். அதேநேரத்தில், அவா் வகுப்பறைக்குச் சென்று பாடம் எடுக்காததால், மாணவிகள் நிம்மதி அடைந்தனா்.
நிகிதாவை நேருக்கு நேராகப் பாா்ப்பதை பல பேராசிரியைகள் தவிா்த்தனா். இந்த நிலையில், அவா் மீண்டும் 20 நாள்கள் மருத்துவ விடுப்பில் சென்ற தகவல் அறிந்த பேராசிரியைகள் நிம்மதியடைந்தனா்.