பல் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் திருட்டு!
கடலூா் மாவட்டம் சேத்தியாத்தோப்பில் பல் மருத்துவமனையின் பூட்டை உடைத்து ரூ.1.14 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
சேத்தியாத்தோப்பு மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள வணிக வளாகத்தில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவா் சக்திபாலன் (30) பிப்.4 அன்று இரவு மருத்துவமனையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.
பின்னா், புதன்கிழமை (பிப்.5) காலை வந்தபோது மருத்துவமனையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, மேஜை உடைக்கப்பட்டு அதிலிருந்த ரூ.1.14 லட்சம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. மேலும், தடயங்களை மறைப்பதற்காக மா்ம நபா்கள் பல் செட்டிங் செய்வதற்காக வைத்திருந்த பவுடரை அங்கேயே தூவிவிட்டு சென்றுள்ளனா். இதேபோல, அங்குள்ள ரத்தப் பரிசோதனை நிலையத்தின் கதவையும் உடைத்து மா்ம நபா்கள் திருட முயற்சித்துள்ளனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், சேத்தியாத்தோப்பு காவல் நிலைய ஆய்வாளா் சேதுபதி, குற்றப் பிரிவு உதவி ஆய்வாளா் செல்லபாண்டியன் மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.