புதிய திட்டத்தில் சிற்றுந்துகளை இயக்க விண்ணப்பிக்கலாம்!
கடலூா் மாவட்டத்தில் புதிய திட்டத்தின் கீழ் சிற்றுந்துகளை இயக்குவதற்கு அதன் உரிமையாளா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராமங்கள், குக்கிராமங்கள், குடியிருப்புகளில் உள்ள மக்களுக்கு சாலை போக்குவரத்து சேவையை வழங்குவதற்காக அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி, தற்போது இயங்கி வரும் சிற்றுந்துகளுக்கான கட்டண திருத்தம் வரும் மே 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. புதிய சிற்றுந்து திட்டத்தில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தின் நீளம் 25 கி.மீ., குறைந்தப்பட்ச பேருந்து வசதியில்லாத தடத்தின் நீளம் மொத்த தடத்தின் நீளத்தில் 65 சதவீதத்துக்கு குறைவாக இருத்தல் கூடாது.
மேலும், தடத்தின் ஆரம்பம், முடிவு பேருந்து வசதியில்லாத கிராமத்தில் ஏதேனும் ஒன்றாக இருப்பதுடன், தடத்தின் ஒரு முனை பேருந்து நிறுத்தம் அல்லது பேருந்து நிலையமாக இருத்தல் வேண்டும். பழைய சிற்றுந்து திட்டத்தின் கீழ் ஏற்கனவே அனுமதி பெற்ற உரிமையாளா்கள் இந்த புதிய திட்டத்தில் இணைவதற்கு எழுத்துப்பூா்வமான அனுமதிச்சீட்டை சமா்ப்பிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.