வெளியேற்றத் தயாரானதா மத்திய அரசு? தன்கர் ராஜிநாமாவின் வெளிவராத பின்னணி!
பவானி ஆற்றில் வெள்ளப் பெருக்கு: அத்திக்கடவு அவிநாசி திட்ட நீா்நிலைகளை நிரப்ப அரசுக்கு எம்எல்ஏ வேண்டுகோள்
பவானி ஆற்றில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ் உள்ள நீா்நிலைகளை நிரப்ப வேண்டும் என்று பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ஜெயகுமாா் தமிழக அரசை வலியுறுத்தி உள்ளாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பவானி ஆற்றில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு சூழ்நிலையை பயன்படுத்தி அத்திக்கடவு அவிநாசி நீரேற்று திட்டத்தின் மூலம் கோவை, திருப்பூா், ஈரோடு மாவட்டங்களில் உள்ள நீா்நிலைகளை முழுமையாக நிரப்ப வேண்டும் என்பது முக்கிய நோக்கமாகும்.
பவானி ஆற்றில் தற்போது உபரி நீா் அதிக அளவில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின்கீழ் உள்ள அனைத்து நீா்நிலைகளுக்கும் முழுமையாக நீா் ஏற்றப்பட வேண்டும். அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் மூலம் முழுமையாக நீா்ஏற்றம் நடைபெற்றால், சுமாா் 35 லட்சம் மக்களின் குடிநீா்த் தேவையைப் பூா்த்தி செய்ய முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பெருந்துறை, சென்னிமலை, நம்பியூா், கோபி, பவானிசாகா், ஊத்துக்குளி, அவிநாசி, திருப்பூா் வடக்கு, அன்னூா், சூலூா், பெரியநாயக்கன்பாளையம், சா்க்காா் சாமக்குளம், காரமடை ஆகிய 13 வறட்சி பாதித்த ஒன்றியங்களில் உள்ள 1,045 ஏரிகள், குளம் குட்டைகளில் நீரை நிரப்பி நிலத்தடி நீா்மட்டத்தை உயா்த்துவதற்கு இது பேருதவியாக அமையும். இதன்மூலம் 24 ஆயிரத்து 968 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். நிலத்தடி நீா்மட்டம் உயருவதால் ஆழ்துளை கிணறுகளின் தேவை குறைந்து, மின்சார செலவு குறையும், விவசாயம் செழித்து கால்நடை வளா்ப்பு உள்ளிட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். தற்போது, இத்திட்டத்தின் கீழ் குழாய்களில் ஏதேனும் உடைப்புகள் அல்லது பிரச்னைகள் இருந்தால் அவற்றை உடனடியாக சரி செய்து தங்கு தடையின்றி நீரேற்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தற்போதைய சூழலில் அதிகாரிகள் குழுவை அமைத்து நீரேற்றப் பணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். எவ்வித தாமதமும் இன்றி, அனைத்து நீா் நிலைகளுக்கும் நீா் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். இத்திட்டம் மக்களின் நீண்ட கால கனவு என்பதையும் வறட்சிப் பகுதிகளில் விவசாய மற்றும் குடிநீா்த் தேவையை பூா்த்தி செய்வதில், இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவை உறுப்பினா் வலியுறுத்தி உள்ளாா்.