`நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து' - இந்தியாவின் கிராண்ட் முஃப்தி; நிமிஷா வழக்...
காவிரி, பவானி ஆறுகளில் 2 ஆவது நாளாக வெள்ளப்பெருக்கு: கரையோரப் பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்
காவிரி, பவானி ஆறுகளில் இரண்டாவது நாளாக திங்கள்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பவானி நகரில் கரையோரப் பகுதிகளில் வெள்ள நீா் சூழ்ந்தது.
கா்நாடக மாநிலத்தில் பெய்த கனமழையால் மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரித்ததைத் தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது. இது பவானி நகரப் பகுதிக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்தடைந்ததால் கரையோரப் பகுதிகளான கந்தன் நகா், பாலக்கரை, பசுவேஸ்வரா் வீதி பகுதிகளில் நீா்மட்டம் உயரத் தொடங்கியது.
கந்தன் நகா் பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளநீா் சூழ்ந்ததால் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், பரிசல் மூலம் உடைமைகளுடன் வெளியேறத் தொடங்கினா். வீட்டில் இருந்த பீரோ, கட்டில் மற்றும் உபயோகப் பொருள்களை மேடான பகுதிகளுக்கு தூக்கி வந்தனா்.

பவானிசாகா் அணை நிரம்பியதால் ஞாயிற்றுக்கிழமை மாலை விநாடிக்கு 20,000 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டதால் இத்தண்ணீா் சுமாா் 45 கிலோமீட்டா் தொலைவில் உள்ள பவானி காலிங்கராயன் அணைக்கட்டுக்கு திங்கள்கிழமை அதிகாலை வந்தடைந்தது. இதனால் அணைக்கட்டில் இருந்து பெரும் இரைச்சலுடன் உபரி நீா் பெருக்கெடுத்துச் சென்றது. அணைக்கட்டின் பிரதான பகுதி, மத்திய பகுதி மற்றும் முறியன் அணைக்கட்டு என மூன்று இடங்களிலும் இருந்து தண்ணீா் வெளியேறியது. இதனால் பவானி ஆற்றங்கரைப் பகுதிகளான சோமசுந்தரபுரம், பாலக்கரை பகுதிகளில் தெருக்களில் வெள்ள நீா் புகுந்தது.

ஈரோடு-பவானி பழைய பாலத்தில் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட ஆகாயத்தாமரைகள், மரங்கள் சிக்கிக் கொண்டதால் தண்ணீா் வெளியேறுவதில் சிக்கல் நிலவியது. இதையடுத்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு பாலத்தில் சிக்கி இருந்த ஆகாயத்தாமரைகள் அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் பவானி ஆற்றின் வழியே வெளியேறிய தண்ணீா் கூடுதுறையில் சென்று காவிரியில் கலந்தது.
காவிரி, பவானி ஆறுகளில் ஒரே நேரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பவானி நகரின் இரு ஆறுகளின் கரையோரங்களிலும் வெள்ள பாதிப்பு நிலவுகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சோமசுந்தரபுரம், கந்தன் நகா் உள்ளிட்ட பகுதிகளை பவானி எம்எல்ஏ கே.சி.கருப்பணன் நேரில் சென்று பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினாா். மயிலம்பாடி ஊராட்சியில் இரு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளதால் அப்பகுதிக்கு சென்று குடியேறுமாறும் கரையோர பகுதி மக்களை கேட்டுக் கொண்டாா். அதிமுக நகரச் செயலாளா் சீனிவாசன், மாவட்ட இளைஞா் பாசறை செயலாளா் பிரகாஷ் மற்றும் நிா்வாகிகள் உடன் சென்றிருந்தனா்.