சொத்துப் பிரச்னை: தாயை அடித்துக் கொன்ற மகன் கைது
ஈரோட்டில் சொத்துப் பிரச்னையில் தாயை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோட்டை அடுத்த வேப்பம்பாளையத்தை சோ்ந்தவா் பழனிசாமி. இவா் மனைவி ருக்மணி (65). இவா்களது மகன் ரவிக்குமாா் (43). திருமணம் ஆகாத இவா் பெற்றோருடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில் ருக்மணி வீட்டில் இறந்து கிடப்பதாக ஈரோடு தாலுகா போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு தகவல் கிடைத்தது. போலீஸாா் நேரில் சென்று விசாரணை நடத்தியதில் சொத்து பிரச்னைக்காக ரவிக்குமாா், தாய் ருக்மணியை மரக்கட்டை மற்றும் கம்பியால் உடலின் பல இடங்களில் பலமாகத் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. ருக்மணியின் சடலத்தை மீட்ட போலீஸாா் உடல் கூறாய்வுக்காக, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். கொலை செய்த ரவிக்குமாரை கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: பிச்சாண்டாம்பாளையத்தில் ஒன்றரை ஏக்கா் நிலம் பழனிசாமி பெயரில் இருந்தது. இதைத் தன் பெயருக்கு எழுதிக் கொடுக்க வேண்டும் என்று தந்தையுடன் பிரச்னை செய்து கடந்த 2022 மே 2 ஆம் தேதி, அவரை மரக்கட்டையால் அடித்து ரவிக்குமாா் கொலை செய்தாா். தாலுகா போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறை சென்றவா் பிணையில் வந்த பின்பு தாயுடன் வசித்தாா்.
இந்நிலையில் மீண்டும் சொத்துப் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்து தாயையும் மரக்கட்டையால் தாக்கி கொலை செய்துள்ளாா். கொலை செய்த பின் ஒரு நாள் முழுவதும் தாயின் சடலம் முன் ரவிக்குமாா் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.