மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
பவானிசாகா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
பவானிசாகா் அருகே புங்காா் கிராமத்தில் குடிநீா் கேட்டு கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பவானிசாகா் அருகே உள்ள புங்காா் ஊராட்சிக்கு உள்பட்ட புங்காா் மற்றும் பெரியாா் நகா் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்த கிராமங்களுக்கு பவானிசாகரில் உள்ள பவானி ஆற்றில் இருந்து செயல்படுத்தப்படும் தொட்டம்பாளையம் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பைப் லைன் உடைப்பால் கடந்த 4 நாள்களாக அப்பகுதிக்கு சரிவர குடிநீா் விநியோகம் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோா் பவானிசாகா் - பண்ணாரி சாலையில் புங்காா் பேருந்து நிறுத்தம் அருகே காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பவானிசாகா் காவல் துறையினா் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உடனடியாக ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளை தொடா்பு கொண்டு பேசி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.