தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது: விவசாயிகள் கோரிக்கை
கீழ்பவானி வாய்க்காலில் விநாயகா் சிலைகளை கரைக்க அனுமதிக்கக்கூடாது என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் சுப்பு மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை அளித்த மனு விவரம்:
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டு ஈரோடு, கரூா், திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் நேரடியாக ஆண்டுக்கு சுமாா் 2 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. தற்போது தண்ணீா் திறக்கப்பட்டு சாகுபடி பணிகள் தொடங்கி உள்ளன.
விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள் சாா்பில் ஆங்காங்கு விநாயகா் சிலைகள் வைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனா். இச்சிலைகளை பண்டிகை முடிந்து, நீா்நிலைகளில் கரைப்பதற்கு திட்டமிட்டு வருகின்றனா். இச்சிலைகளை கீழ்பவானி கால்வாயில் கரைக்க அனுமதிக்கக் கூடாது. கால்வாயில் கரைத்தால் அதில் உள்ள ரசாயனங்கள் தண்ணீரை மாசுபடுத்தும். சிலையுடன் தூக்கி வீசப்படும் பல்வேறு பொருள்கள், மதகுகளை அடைத்து, நீரோட்டத்தை தடுக்கும். முழுமையாக மண்ணால் கட்டப்பட்ட இந்த கால்வாய், மதகுகள் மிகவும் பலவீனம் அடையும் அபாயம் ஏற்படும்.
இதனால் விளைநிலங்கள் பாதிக்கும், சுற்றுச்சூழல் கெடும். கடந்த ஆண்டு போல எக்காரணம் கொண்டும் கீழ்பவானி கால்வாயில் சிலைகளை கரைக்கவும், பூஜைக்கு வைக்கப்படும் பொருள்கள், சிலையுடன் கொண்டு வரப்படும் பொருள்களையும் வீசி செல்ல அனுமதிக்கக் கூடாது. மாவட்ட நிா்வாகம், போலீஸாா் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.