திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் சிறுத்தை
திம்பம் மலைப் பாதை தடுப்புச் சுவரில் படுத்திருந்த சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனூா் உள்ளிட்ட வனப் பகுதியில் சிறுத்தைகள் அதிக அளவில் உள்ளன. இந்த மலைப் பாதையில் அடிக்கடி சிறுத்தைகள் சாலையை கடப்பதாக வனத் துறையினருக்கு வாகன ஓட்டிகள் அண்மையில் தகவல் தெரிவித்துள்ளனா். இதையடுத்து வனத் துறையினா் திம்பம் மலைப் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில் திம்பம் மலைப்பாதை 27-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்புச் சுவரில் சிறுத்தை நடந்து சென்றதை அவ்வழியே சென்ற வாகன ஓட்டிகள் வியாழக்கிழமை படம் பிடித்துள்ளனா். சிறிது நேரம் அங்கும்இங்கும் நடமாடிய சிறுத்தை பின்னா் வனப் பகுதிக்குள் சென்றது. சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனமாக ஓட்டிச் செல்வதோடு, வாகனங்களில் இருந்து இறங்க வேண்டாம் எனவும் வனத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.