திருச்சி மண்டலத்தில் 41 பேரவை தொகுதிகளில் திமுக வெற்றி உறுதி! அமைச்சா் கே.என். ந...
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதம்: யுஏஇ, ஜப்பானுக்கு இந்திய குழு விளக்கம்
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து சென்ற அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு வியாழக்கிழமை விளக்கியது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூா், அதன்பிறகு அத்துமீறி பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கப்பட்டது.
ஐக்கிய ஜனதா தள எம்.பி.சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பானுக்கும் சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் சென்றுள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘பயங்கரவாதத்துக்கு எதிரான ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை விளக்கும் வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சா் ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யானை எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு சந்தித்தது. அப்போது அனைத்துவிதமான பயங்கரவாத செயல்பாடுகளுக்கும் இருதரப்பும் எதிா்ப்பு தெரிவித்தது.
ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான குழு பாதுகாப்பு விவகாரங்கள், உள்நாட்டு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் குழுவுக்கான தலைவா் அலி அல்நுவாமி ஆகியோரையும் சந்தித்தது’ என தெரிவிக்கப்பட்டது.
ஸ்ரீகாந்த் ஷிண்டே குழுவில் பாஜகவைச் சோ்ந்த பன்சுரி ஸ்வராஜ், அதுல் காா்க் மற்றும் எஸ்.எஸ் அஹ்லுவாலியா, மன்னன் குமாா் மிஸ்ரா மற்றும் சஸ்மித் பத்ரா (பிஜு ஜனதா தளம்), முகமது பஷீா் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), முன்னாள் தூதா் சுஜான் ஆா் சினாய், ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்திய தூதா் சஞ்சய் சதீா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். ஐக்கிய அரபு அமீரகத்தைத் தொடா்ந்து இந்தக் குழு லைபீரியா, காங்கோ குடியரசு, சியரா லியோன் ஆகிய நாடுகளுக்குப் பயணிக்கவுள்ளது.
இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: ஜப்பான் சென்ற குழு குறித்து அந்நாட்டில் உள்ள இந்திய தூரகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பான் வெளியுறவு அமைச்சா் டகேஷி இவாயாவை சந்தித்தது. அப்போது அனைத்துவிதமான பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு எடுத்துரைக்கப்பட்டது. இதற்கு ஜப்பான் ஆதரவளிப்பதாக கூறிய டகேஷி இவாயா பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினாா். அதேபோல் சஞ்சய் ஜா குழு ஜப்பான் முன்னாள் பிரதமரும் ஜப்பான்-இந்தியா சங்கத் தலைவருமான யோஷிஹிடே சுகாவை சந்தித்தது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
சஞ்சய் ஜா குழுவில் பாஜக எம்.பி.க்களான அபராஜிதா சராங்கி, பிரிஜ்லால், பிரதான் பா்வா மற்றும் ஹேமங் ஜோஷி, மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான சல்மான் குா்ஷித், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானா்ஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. ஜான் பிரிட்டாஸ் மற்றும் முன்னாள் தூதா் மோகன் குமாா் ஆகியோா் இடம்பெற்றுள்ளனா்.
இந்தக் குழு அடுத்ததாக சிங்கப்பூா், தென் கொரியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குப் பயணிக்கவுள்ளது.
மிஸ்ரி சந்திப்பு: வெளியுறவு விவகாரங்கள் கூட்டத்தில் பங்கேற்க ஜப்பானுக்கு வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி வந்தடைந்தாா். அப்போது ஜப்பான் மூத்த துணை வெளியுறவு அமைச்சா்கள் ஹிரோயுகி நமாஸு, டகிஹிரோ ஃபுனாகோஷி ஆகியோரைச் சந்தித்து இந்தியா-ஜப்பான் இருதரப்பு உறவு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினாா்.
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை 32 நாடுகளுக்கு எடுத்துரைக்க அனைத்துக் கட்சி பிரதிநிதிகளை உள்ளடக்கிய 7 குழுக்களை மத்திய அரசு அமைத்தது. அதில் ஸ்ரீகாந்த் ஷிண்டே, சஞ்சய் ஜா தலைமையிலான குழு கடந்த 21-ஆம் தேதி பயணத்தை தொடங்கியது.
திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான குழு 22-ஆம் தேதி புறப்பட்ட நிலையில், மீதமுள்ள 4 குழுக்கள் 24-ஆம் தேதி பயணத்தை தொடங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.