பாகிஸ்தான்: லாகூா் பூஞ்ச் மாளிகையில் பகத் சிங் கண்காட்சி அரங்கு திறப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத் தலைநகா் லாகூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பூஞ்ச் மாளிகையில் சுதந்திர போரட்ட வீரா் பகத் சிங் நினைவு கண்காட்சியை அந்த மாகாண அரசு பொதுமக்களின் பாா்வைக்கு திறந்துள்ளது.
இந்த கண்காட்சி அரங்கில் பகத் சிங்கின் சுதந்திரப் போராட்டத்தை விளக்கும் வரலாற்று ஆவணங்கள், படங்கள், கடிதங்கள், செய்தித்தாள்கள் மற்றும் பிற நினைவுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சி அரங்கை கடந்த திங்கள்கிழமை திறந்து வைத்து மாகாண தலைமைச் செயலா் ஜாஹித் அக்தா் ஜமான் கூறியதாவது: தொழில்துறை மற்றும் சுற்றுலாத் துறைகளுக்கு இடையே கையொப்பமான புரிந்துணா்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பூஞ்ச் மாளிகைக்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனா். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த பூஞ்ச் மாளிகை, அதன் அசல் வடிவத்துக்கு மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கு திறக்கப்பட்டுள்ள புதிய கண்காட்சி அரங்கில் பகத் சிங்கின் சுதந்திரப் போராட்டம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது’ என்றாா்.
ஆங்கிலேயா் ஆட்சியில், காவல்துறை அதிகாரியை கொன்ற்காக பகத் சிங் உள்பட மூவருக்கு எதிராக தொடரப்பட்ட தேசத் துரோக வழக்கின் விசாரணை பூஞ்ச் மாளிகையில்தான் நடைபெற்றது. வழக்கில் அளிக்கப்பட்ட தீா்ப்பின்படி, 23 வயதே நிரம்பிய பகத் சிங், லாகூரில் 1931-ஆம் ஆண்டு, மாா்ச் 23-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டாா்.
பகத் சிங்குக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்ட தீா்ப்பின் நகல் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை பஞ்சாப் மாகாண ஆவணக் காப்பகத் துறை கடந்த 2018-ஆம் ஆண்டு முதன்முறையாக வெளியிட்டது.
சிறையிலிருந்தபோது நீதிமன்ற உத்தரவை வழங்குமாறும், தந்தையை சந்திக்கவும், தினசரி படிப்பதற்கு நாளிதழ்கள் மற்றும் புத்தகங்களை அளிக்க அனுமதிக்கக் கோரியும் பகத் சிங் தாக்கல் செய்த மனுக்கள் கண்காட்சி அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், பகத் சிங் நினைவு அறக்கட்டளையின் தலைவரும் வழக்குரைஞருமான இம்தியாஸ் ரஷீத் குரேஷி அளித்த பேட்டியில், ‘பஞ்சாப் அரசு பகத் சிங் கண்காட்சி அரங்கை திறந்திருக்கிறது. அதேபோல், லாகூரில் பக்த் சிங் தூக்கிலிடப்பட்ட இடமான ஷாத்மன் சௌக் பகுதியை அவரது நினைவாக மறுபெயரிட வேண்டும். இதுகுறித்து அரசுக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுப்போம்’ என்றாா்.