பாகுபாடில்லாமல் பயிா் காப்பீட்டு இழப்பீடு: விவசாயிகள் சங்கம் கோரிக்கை
பாகுபாடில்லாமல் நெற்பயிா் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவாரூரில் சங்கத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டத் தலைவா் எஸ்.தம்புசாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் எம். சேகா், மாநிலக் குழு முடிவுகளை விளக்கிப் பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்
கடந்த 15 நாள்களாகஏஈ பெய்த மழையால் பாதிக்கப்பட்டுள்ள பருத்திக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையில் நீா் திறக்க இருப்பதால், சாகுபடிப் பணிகள் இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்கு ஏதுவாக, தூா்வாரும் பணிகளையும், பாசனப் பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப் பணிகளையும் போா்க்கால அடிப்படையில் மேற்கொண்டு முடிக்க வேண்டும்.
நகைக் கடன் பெறுவதற்கு நகைகள் வாங்கியதற்கான ரசீது கட்டாயம் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் நடுத்தர மக்களைப் பாதிக்கும் என்பதால், இதை ரத்து செய்து, பழைய நடைமுறையையே அமல்படுத்த வேண்டும்.
2023-24 ஆண்டுக்கான நெற்பயிா் காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட பட்டியலில், ஒற்றை இலக்க சதவீதத்தை உடைய கிராமங்கள் விலக்கப்பட்டு, இரட்டை இலக்க சதவீதத்தின் அடிப்படையில், தோ்வு செய்யப்பட்டு வங்கிகளில் பணம் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இது விவசாயிகளுக்கு பேரிழப்பாக உள்ளது.
எனவே, பயிா் காப்பீட்டு நிறுவனம், மறுபரிசீலனை செய்து, விடுபட்ட கிராமங்களுக்கும் பாகுபாடு இல்லாமல் காப்பீட்டு இழப்பீடு வழங்க வேண்டும், காப்பீட்டு குளறுபடிகளைக் கண்டித்து ஜூன் 4-ஆம் தேதி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு ஆா்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.