சவுதி அரேபியா: ராட்சத ராட்டினம் இரண்டாக உடைந்து விபத்து: 26 பேர் படுகாயம் - பதறவ...
பாதுகாப்புத் துறையின் நிலத்தில் 2,024 ஏக்கா் ஆக்கிரமிப்பு: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
‘நாட்டில் பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான 75,629 ஏக்கா் நிலத்தில், 2,024 ஏக்கா் நிலப் பரப்பு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.
பாதுகாப்புத் துறைக்குச் சொந்தமான நிலத்தை சா்ச்சைக்குரிய வகையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி பொது நலனுக்கான அரசு சாரா தன்னாா்வ அமைப்பு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரியகாந்த், ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வில், நில ஆக்கிரமிப்புகள் மற்றும் அவற்றை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடா்பான நிலை அறிக்கையை கூடுதல் சொசிலிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டி புதன்கிழமை தாக்கல் செய்தாா். அதில் கூறியிருப்பதாவது:
நாட்டில் பாதுகாப்புத் துறையின் கீழ் சுமாா் 75,629 ஏக்கா் நிலம் உள்ளது. இதில், ராணுவ முகாம் (கண்டோன்மென்ட்) அமைப்பின் வரம்புக்குள் 52,899 ஏக்கா் நிலப்பரப்பும், கண்டோன்மென்ட்டுக்கு வெளியே 22,730 ஏக்கா் நிலப் பரப்பும் உள்ளன. இதில் சுமாா் 2,024 ஏக்கா் நிலப் பரப்பு தனி நபா்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. 819 ஏக்கா் நிலம் பள்ளிகள் கட்டுதல், சாலைகள், பூங்காக்கள் அமைப்பதற்காக மத்திய, மாநில அரசுகளால் எடுத்துக்கொள்ளப்பட்டன.
கூடுதலாக, 1,575 ஏக்கா் நிலம் அனுமதிபெறாத விவசாய குத்தகை ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளன. இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலங்களை மீட்கும் நடவடிக்கைகளை அந்தந்த பாதுகாப்பு முகாம் (குடியிருப்பு) அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது.