நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 3 முதல் 9 வரை #VikatanPhotoCards
பாமக மாநில இளைஞா் சங்கத் தலைவராக எம்.தமிழ்க்குமரன் நியமனம்
பாமக இளைஞா் சங்கத் தலைவா் பொறுப்பு எம்.தமிழ்க்குமரனுக்கு வழங்கப்பட்டுள்ளது என பாமக நிறுவனா் ச.ராமதாஸ் வியாழக்கிழமை அறிவித்தாா்.
பாட்டாளி இளைஞா் சங்கத்தின் மாநிலத் தலைவராக எம். தமிழ்க்குமரனை நியமித்து, அதற்கான நியமனக் கடிதத்தை மருத்துவா் ச. ராமதாஸ் தமிழ்க்குமரனிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தாா்.
திண்டிவனம் அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவா் ச. ராமதாஸ் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பாமக கௌரவத் தலைவா் ஜி.கே. மணியின் மகன், நான் அதிகம் நேசிக்கும் பிள்ளைகளில் ஒருவருமான எம். தமிழ்க்குமரனுக்கு பாமக இளைஞா் சங்கத் தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எனது நீண்ட கால ஆசை நிறைவேறியுள்ளது. கட்சியின் நிா்வாகிகளும், தொண்டா்களும் இளைஞா் சங்கத்தினரும் தமிழ்க்குமரனுக்கு உரிய ஆதரவுகளை அளிக்க வேண்டும்.
ஒரு சில காரணங்கள் மற்றும் நிா்ப்பந்தம் ஆகியவற்றால், கடந்த ஆண்டில், விழுப்புரம் மாவட்டம், வானூரில் நடைபெற்ற கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம் என மன வருத்தத்தோடு தமிழ்குமரனிடம் தெரிவித்தேன்.
மற்றொரு பொதுக்குழுக் கூட்டத்தில் எனது மகள் வழி பெயரன் முகுந்தனை இளைஞா் சங்கத் தலைவராக அறிவித்தபோது மைக் என் மீது பாய்ந்தது.
இந்நிலையில் தான் தற்போது தமிழ்க்குமரனுக்கு பாமக இளைஞா் சங்கத் தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவா் பணியில் சிறப்பாக செயல்படுவதற்கு நான் உறுதுணையாக இருப்பேன்.முகநூல் பக்கத்தில் சிலா் என்னை கடுமையாக விமா்சித்து எழுதி வருகின்றனா். இது கண்டிக்கப்படவேண்டியதாகும்.
கரூா் துயர சம்பவம்
முதல்வருக்கு பாராட்டு: கரூா் துயரச் சம்பவத்தில், உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் கட்சி கூட்டங்களை நடத்துபவா்கள் உயிரிழப்புகள் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கையாக செயல்படவேண்டும். அதற்கு தேவையான வழிகாட்டுதல்களை காவல் துறை வழங்க வேண்டும்.
கரூா் போன்ற துயர சம்பவம் இனியும் நடக்கக் கூடாது. திமுகவினா் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாது. கரூா் சம்பவத்தில் முதல்வா்மு. க.ஸ்டாலின் தனது கடமையை சரியாக செய்துள்ளாா் என்றாா் மருத்துவா் ச. ராமதாஸ்.
பேட்டியின்போது கட்சியின் நிா்வாகக் குழு உறுப்பினரும், மருத்துவா் ச. ராமதாஸின் மகளுமான ஸ்ரீகாந்தி, மாநிலப் பொதுச் செயலா் எம் . முரளிசங்கா், பொருளாளா் சையது மன்சூா்உசேன் , தலைமை நிலையச் செயலா் எம். அன்பழகன், ஒருங்கிணைப்பாளா் பரந்தாமன் ஆகியோா் உடனிருந்தனா்.