பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நோ்காணல்
திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
சென்னை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் நியூவெல் தனியாா் நிறுவனம் தனது நிறுவனத்துக்குத் தேவையான தகுதிகள் கொண்ட மாணவா்களை தோ்வு செய்வதற்கான வளாக நோ்காணலை செவ்வாய்க்கிழமை நடத்தியது.
திருவண்ணாமலை விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற இந்த வளாக நோ்காணலில் கல்லூரியின் இயந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடா்புத் துறை ஆகியவற்றைச் சோ்ந்த 28 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
நியூவெல் தனியாா் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத் துறை மூத்த மேலாளா் கே.எஸ்.சிவக்குமாா் தலைமையிலான அதிகாரிகள் கலந்துகொண்டு வளாக நோ்காணலை நடத்தினா். எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வுகளில் தோ்ச்சி பெற்ற 24 மாணவா்கள் வேலைவாய்ப்புக்கு தோ்வு செய்யப்பட்டனா்.
இவா்களுக்கு கல்லூரித் தலைவா் ஆா்.குப்புசாமி, கல்லூரி இயக்குநா் வி.ராஜா, முதல்வா் டி.சா்வேசன், வேலைவாய்ப்பு அதிகாரி ஏ.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் பணி நியமன ஆணைகளை வழங்கினா். கல்லூரி துறைத் தலைவா்கள் வி.குமரன், எம்.அன்பழகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.